கோலாலம்பூர், மார்ச் 4-
சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேச தமிழ் பள்ளிகளுக்கிடையிலான கால்பந்து போட்டியில் ஷா ஆலம் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் 17ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டியில் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி இறுதி ஆட்டத்தில் பெனால்டி மூலம் 3 -2 என்ற கோல் எண்ணிக்கையில் தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளியை வென்றது.

இந்த வெற்றியின் மூலம் 2000 ஆயிரம் வெள்ளி ரொக்கம், , போட்டிக்கான வெற்றிக் கிண்ணத்தையும் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி வென்றது. அதோடு இப்போட்டியில் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியின் கோல் காவலர் கௌரேஸ்வர் சிறந்த கோல் காவலராகவும் அவினேஷ் சிறந்த விளையாட்டாகவும் தேர்வு பெற்றனர்.
முன்னதாக 2011ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போட்டியிலும் சுங்கை ரெங்கம் தமிழ் பள்ளி கால்பந்து குழுவினர் வெற்றியாளர் பட்டத்தை வென்றர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி இந்த போட்டியில் வென்று சாதனைப் படைத்துள்ளது.

கடந்த இரண்டு மாத காலமாக இப்போட்டிக்காக சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தயாராகி வந்ததோடு இறுதியாட்டத்தில் முழுத்திறனையும் பயன்படுத்தி வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சியடைவதாக பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி விமாலாதேவி தெரிவித்தார்.
இந்த வெற்றிக்காக பள்ளி கால்பந்துக் குழுவின் நிர்வாகி திருச்செல்வம், தலைமைப் பயிற்சியாளர் பத்மநாதன் ஆகியோருக்கும் விமாலாதேவி தமது பாராட்டை தெரிவித்துக் கொண்டார். சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேசத்திலிருந்து 64 தமிழ்ப்பள்ளிகள் கலந்துகொண்ட இப்போட்டியை சிலாங்கூர் ராஜா மூடா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

சிலாங்கூர் மாநில கால்பந்துக் குழுவின் முன்னாள் ஆட்டக்காரர்களான செம்பகமாறன், பி.குணாளன் பயிற்சியாளர் பி.சத்தியநாதன் ஆகியோரும் இப்போட்டிக்கு வருகைபுரிந்து மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.


