கோலாலம்பூர், ஜூன் 6-
மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் எனும் மூவின மக்கள் இணைந்ததுதான் மலேசியர்கள் என்ற கெஅடிலான் துணைத் தலைவர் ரபிஸி ரம்லியின் கருத்தைத் தாம் வரவேற்பதாக மலேசிய இந்தியர் ஒற்றுமை கழகத்தின் (ஓமியா) தலைவர் டாக்டர் நெல்சன் முருகன் கூறினார்.
அண்மையில் கெஅடிலான் துணைத் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்ற ரபிஸிக்கு டாக்டர் நெல்சன் தனது பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார்.
அதே சமயத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று ஒர் ஆலோசகராக மட்டும் செயல்பட வேண்டும். இவரின் புதல்வி நூருல் இஸா கட்சியை நன்முறையில் வழிநடத்துவதற்கு ரபிஸிக்குத் தோள் கொடுக்க வேண்டும். கட்சி வலுப் பெறுவதற்கும் மக்களிடம் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கும் இத்தகைய மாற்றங்கள் மிகவும் அவசியம் என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் ஆலோசனை கூறினார்.
அதே வேளையில், சைட் செடிக் தலைமையிலான மூடா கட்சி மற்றும் ஜசெகவும் பக்காத்தான் ஹராப்பானில் இணைந்து கொண்டால் வரும் பொதுத் தேர்தலில் இக்கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்யும்.
“ இந்நாட்டின் குடியுரிமை பெற்ற அனைத்து இனத்தவர்களும் மலேசியர்களே என்ற ரபிஸியின் கருத்து என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இவரின் இந்தக் கருத்தே இவரை நான் முழுமையாக ஆதரிக்கக் காரணம் “ என்று டாக்டர் நெல்சன் மேலும் சொன்னார்.
“ பதவி வழங்குவதில் கோட்டா முறை முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். ஒருவர் திறமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் .பொது மக்களிடையே வேறுபாடு கிடையாது.அரசியல்வாதிகளின் குழப்பத்தினாலேயே நாம் பிளவுபட்டுள்ளோம். தற்போது அனைத்தும் மத சார்பில் போய்க் கொண்டிருக்கிறது”.
“ ஓர் இந்தியரோ, மலாய்க்காரரோ அல்லது சீனரோ இணைந்து செயல்பட்டால் வேற்றுமைக்கு இடமிருக்காது. ஓர் இந்தியரின் திறமையை வெளிக் கொணரும்போது அதில் மற்ற இன மக்களுக்கும் பங்குண்டு. இது போலவே, ஒரு மலாய்க்காரரின் திறமை வெளிப்படும்போது அவரின் வளர்ச்சியில், இந்தியர் மற்றும் சீனர்களுக்கும் பங்குண்டு.இந்தக் கருத்தை ரபிஸி முன் மொழிய வேண்டும். இது மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் பொருந்தும். நிறைய கட்சிகளில் ஊழல் நிறைந்த தலைவர்கள் உள்ளனர். அவர்கள் இதனை அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று டாக்டர் நெல்சன் வலியுறுத்தினார்.
“ எனது தலைமையிலான அமைப்பான ஓமியாவில் 10,000 பேர் அங்கத்தினர்களாக உள்ளனர். அங்கத்தினர்களாக பதிவு செய்யாதவர்களும் கூட எனக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இது தவிர்த்து, எந்த சமூக ஊடகத்தில் நான் கருத்து பதிவு செய்தாலும் அதனை கிட்டத்தட்ட 1 லட்சம் தொடங்கி 2 லட்சம் பேர் வரை பார்க்கின்றனர்” என்றார்.
“இதன் அடிப்படையில் நெல்சனால் என்ன செய்துவிட முடியும். ஓமியாவால் என்ன செய்துவிட முடியும் என்று நினைக்க வேண்டாம். காரணம் எங்களிடம் பெரிய என்ணிக்கையிலான வாக்காளர்கள் உள்ளனர். இந்தியர்களுக்குச் சேவையாற்றக்கூடிய தலைவர்கள் யார் யார் என்பதை எங்களால் தேர்ந்தெடுக்க முடியும்”.
“இதனை, அன்வார், ரபிஸி, லிம் குவான் எங், அந்தோணிக் லோக் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கவனத்திற்கும் நான் கொண்டு செல்ல விரும்புகிறேன் என்றார் டாக்டர் நெல்சன்.


