Homeஆன்மீகம்அழகு காவடிகளுடன் களை கட்டியது தைப்பூசம்!

அழகு காவடிகளுடன் களை கட்டியது தைப்பூசம்!

பத்துமலை, பிப்.5-
“வெற்றி வேல் முருகனுக்கு” என்ற கோஷத்துடன் நாடளாவிய நிலையில் உள்ள முருகன் ஆலயங்களில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தி தைப்பூச விழாவின் உன்னதத்தைப் புலப்படுத்தினர்.

பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடும் நன்நாளில் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவே தைப்பூச திருவிழா.
அவ்வகையில் இன்று நாடு முழுமையும் உள்ள முருகன் திருத்தலங்களில் தைப்பூச திருவிழா. வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது..

பத்துமலை முருகன் திருத்தலம், பினாங்கு தண்ணீர் மலை ஆலயம், சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம், கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம், ஜொகூர் பாரு ஸ்ரீ சுப்ரமணியர் கோவில் என நாட்டின் பல பகுதிகளில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை காவடிகள் மற்றும் பால்குடங்கள் ஏந்தி நிறைவேற்றினர்.

குறிப்பாக, லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் பத்துமலை திருத்தலத்தில் கோவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தலுக்குப் பின்னர் இவ்வாண்டு மீண்டும் பழையபடி பக்தர்கள் திரண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

பக்திப்பரவசமூட்டும் முருகப் பெருமானின் பாடல்களைப் பாடியபடி பக்தர்கள் பால் காவடி, கரும்பு காவடி, மயில் காவடி என வண்ண வண்ண காவடிகளையும், பால் குடங்களையும் ஏந்தி முருகனுக்கு தங்களின் நேர்த்திக்கடன்களைச் செலுத்தியது தைப்பூசத் திருநாளைக் கோலாகலமாக்கியது.

இந்தத் தைப்பூச விழாவில் பக்தர்கள் தேங்காய்களை உடைத்தும் முடி காணிக்கை செலுத்தியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். மாலையில் சிறிது நேரம் பெய்த மழை பக்தர்களின் பக்திக்கு எவ்வித இடையூறையும் ஏற்படுத்தவில்லை.
பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை சுமூகமான முறையில் நிறைவேற்றுவதற்கு ஏதுவாக தேவஸ்தானம் நேர்த்தியான முறையில் செய்த முன்னேற்பாடுகளைக் காண முடிந்தது.


இம்முறை தைப்பூசம் வார இறுதி நாட்களில் வந்ததால் பல மாநிலங்களில் இருந்து அதிகமான பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்துவதற்காக பத்துமலை திருத்தலத்தில் திரண்டனர்.

spot_img

latest articles

explore more