spot_img
10.2 C
London
spot_img
Home மலேசியா கல்வி ரிவர்சைட் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை மீது புகார்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை; பெற்றோர்கள் அதிருப்தி!

ரிவர்சைட் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை மீது புகார்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை; பெற்றோர்கள் அதிருப்தி!

0
350

கோலசிலாங்கூர், நவ.15-
இங்குள்ள ரிவர்சைட் தோட்ட தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை மற்றும் துணைத்தலைமையாசிரியை மீது அதிருப்தி கொண்டதன் காரணமாக கடந்த ஒரு வருட காலமாக நாங்கள் பல்வேறு எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறோம்.

இது குறித்து கோலசிலாங்கூர் மாவட்ட கல்வி இலாகாவிலும் மாநில கல்வி இலாகாவிலும் பலமுறை புகார்களை அளித்து விட்டோம். ஆனால், எங்களின் புகார்களின் அடிப்படையில் முறையான நடவடிக்கையை எடுக்காமல் மாவட்ட மற்றும் மாநில கல்வி இலாகாக்கள் பள்ளி தலைமையாசிரியையும் துணைத்தலைமையாசிரியையும் தற்காப்பது ஏன்? என அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பத்மநாதன் கேள்வியெழுப்பினார்.

இன்று சம்பந்தப்பட்ட தலைமையாசிரியை, துணைத்தலைமையாசியை ஆகிய இருவருக்கும் எதிராக மாணவர்களின் பெற்றோர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இது குறித்து வினவப்பட்ட போது பத்மநாதன் அனேகன்.காம் இணையத்தள பதிவேட்டிடம் மேற்கண்டவாறு கூறினார். கடந்த மாதம் 2ஆம் தேதி மாவட்ட கல்வி இலாகாவின் துணைத்தலைவர் ஜைனாலுடன் சந்திப்பு நடத்தி நாங்கள் முறையிட்டோம். அதே வாரத்தில் 4ஆம் தேதி மாவட்ட கல்வி இலாகாவின் தலைவர் மார்புவாத்தோன் பிந்தி அஸ்தேரோவை சந்தித்து சுமார் 3 மணி நேரம் எங்களின் அதிருப்திகளை தெரிவித்தோம். அந்த சந்திப்பின் இறுதியில் அந்த தலைமையாசிரியையை பள்ளியிலிருந்து இடமாற்றம் செய்வதாக எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், இன்று வரையில் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது பெற்றோர்களாகிய எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக பத்மநாதன் கூறினார். குறிப்பாக, கடந்த 7 மாதங்களாக மாநில கல்வி இலாகாவின் புகார் பிரிவு தலைவர் சூல்ஹெல்மி பின் பக்தியார் ஜாமிலியை சந்திப்பதற்கு அனுமதி கேட்டு வருகிறோம். ஆனால், இன்று வரையில் அவரை சந்திக்க முடியவில்லை. அமைச்சர், துணையமைச்சர்களைவிட அவருக்கு வேலை பளு அவ்வளவு அதிகமா?

எங்களின் பிள்ளைகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு நாங்கள் போராடி வருகிறோம். ஆனால், மாநில கல்வி இலாகாவின் புகார் பிரிவில் இருக்கும் அவர் எங்களை சந்திக்க மறுப்பு தெரிவித்து வருகிறார். அதோடு, இது குறித்து சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் டேனியலுடன் பலமுறை இதுகுறித்து பேசி விட்டோம். அவரும் மழுப்பலான பதிலையே வழங்கி வருவதோடு மாநில கல்வி இலாகாவின் புகார் பிரிவையே கைகாட்டி வருகிறார்.

கடந்த ஒரு வருட காலமாக பள்ளி தவணை எங்களின் போராட்டதிலேயே முடிந்து விட்டது. இதுவரையில் ஆக்கக்கரமான நடவடிக்கைகள் ஏதும் இல்லை. போலீஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், கல்வி இலாகாக்கள் என ஏறக்குறைய 30க்கும் அதிகமான புகார்களை அளித்து விட்டோம். இருந்தும் ஒரு நடவடிக்கைகூட எடுக்கப்படவில்லை. சிறு பள்ளி என்பதால் அலட்சியமா? சம்பந்தப்பட்ட தலைமையாசிரியையால் இப்பள்ளிக்கு ஒரு மாற்றம் கூட ஏற்படவில்லை. பள்ளியின் வளர்ச்சிக்கு அவர் முட்டுக்கட்டையாக இருப்பதோடு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தையும் புறக்கணித்து வருகிறார்.

இனி, இப்படிப்பட்ட தலைமையாசிரியை எங்களுக்கு தேவையில்லை. அதுவரையில் தீர்வுக்காக நாங்கள் போராடுவோம். கூடிய விரைவில் மாநில கல்வித்துறை அலுவலகத்தின் முன்பு போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இவ்விவகாரத்தில் துணைக்கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன் உடனடியாக தீர்வு காண வேண்டுமென பத்மநாதன் வலியுறுத்தினார்.