ஷா ஆலம், டிச. 20-
சிலாங்கூரில் பல பகுதிகளில் உடம்புபிடி, சூதாட்டம் முதலான சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. அவற்றை அடையாளம் காட்ட ம.இ.கா. இளைஞர் பிரிவு தயாராக உள்ளது. நடவடிக்கை எடுக்க மாநில அரசாங்கம் தயாரா? என அதன் செயலாளர் அர்விந்த் கிருஷ்ணன் கேள்வியெழுப்பினார்.
இதற்கு முன்பு சிவப்பு சட்டை இயக்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனோஸ், சட்டவிரோத இடங்களை அடையாளம் காட்டினார். ஆனால், இதுவரையில் எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என அவர் கூறினார்.
சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி இன்று காலை மணி 9.30 அளவில் அந்த ஆலயத்தின் பணிப்படையுடன் இணைந்து ம.இ.கா. இளைஞர் பிரிவு போராட்டம் நடத்தியது. அதன் பின்னர், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் செயலாளரிடம் மகஜரை வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அர்விந்த் கிருஷ்ணன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த ஆலய விவகாரத்தில் தீர்வு காண்பதற்கு சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆனால், இன்று வரையில் அந்த ஆலயத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை. சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் 145 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் 145 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரம் உள்ளது. அந்த மரத்திற்கு வனத்துறையின் சான்றிதழும் உள்ளது. இது இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் அடையாளம். அதனை இழக்க நாம் அனுமதிக்கக்கூடாது.
இந்த ஆலயத்தை இங்கேயே நிலை நிறுத்த நாகராஜூ தலைமையிலான ஆலய பணிப்படையினர் போராடி வருகின்றனர். அவர்களுக்கு எங்களின் ஆதரவை வெளிப்படுத்தி வருகிறோம். தொன்மை வாய்ந்த இந்த ஆலயம் இங்கேயே நிலை நிறுத்தப்பட வேண்டும் என மாநில அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம் என அர்விந்த் கிருஷ்ணன் கூறினார்.


