லுக்காகூவை ஒப்பந்தம் செய்ய ஜுவென்டெஸ் முயற்சி!

ரோம், டிச. 24-

இத்தாலியின் முன்னணி கால்பந்து அணியான ஜுவெண்டெஸ், தமது தாக்குதல் பகுதியை பலப்படுத்தும் நோக்கத்தில் தாக்குதல் ஆட்டக்காரரை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது. ஜனவரி மாதம் தொடங்கும் ஆட்டக்காரர் ஒப்பந்ததிற்கான காலகட்டத்தில் மன்செஸ்டர் யுனைடெட் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொமெலு லுக்காக்கூவை பெறுவதற்கு ஜுவெண்டெஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாக இங்கிலாந்தின் டெய்லி மெயின் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜுவெண்டெஸ் அணியின் தாக்குதல் ஆட்டக்காரரான மாரியோ மஞ்சுகிச் 32 வயதை எட்டியுள்ளார். அவருக்கு பதிலான ஒரு மாற்று ஆட்டக்காரருக்கு ஜுவெண்டெஸ் குறி வைத்துள்ளது. 25 வயதாகும் லுக்காக்கூ இத்தாலியின் சிறந்த அடைவு நிலையை வெளிப்படுத்த முடியுமென அந்த கிளப் நிர்வாகம் நம்புகின்றது.

இப்பருவத்தில் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 22 ஆட்டங்களில் களமிறங்கி லுக்காக்கூ 6 கோல்களை மட்டுமே அடித்துள்ளார். லுக்காக்கூ மட்டுமின்றி மன்செஸ்டர் யுனைடெட் அணியின் மத்திய திடல் ஆட்டக்காரர் பௌல் பொக்பா, தாக்குதல் ஆட்டக்காரர் அந்தோனியோ மார்ஷேல் ஆகிய ஆட்டக்காரர்கள் மீதும் ஜுவெண்டெஸ் அணியின் பார்வை விழுந்துள்ளது.

2016ஆம் ஆண்டு 89 மில்லியன் பவுன் தொகையில் ஜுவெண்டெஸ் அணியிலிருந்து விலகி பௌல் பொக்பா மன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். அவ்வணியின் முன்னாள் நிர்வாகி ஜோஷே மரின்யோவுடன் மனகசப்பு ஏற்பட்டதால் அவர் அவ்வணியை வீட்டு வெளியேறிவிடுவார் என கூறப்பட்டது.
ஜோஷே மரின்யோ நீக்கப்பட்ட பிறகு பொக்பா மீண்டும் தமது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஜனவரி மாதம் இறுதிக்குள் மன்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து பல முன்னணி ஆட்டக்காரர்கள் விலகுவார்கள் என கூறப்படுகின்றது.