கனா திரைப்படத்தை கொண்டாடிய மலேசிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

கோலாலம்பூர், டிச. 28-

இசையமைப்பாளராக இருந்து இயக்குனராகியிருக்கும் அருண்ராஜா காமராஜுக்கும், தயாரிப்பாளராக நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் முதல் படம் கனா. இப்படத்தில் கௌசல்யாவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன் கனாவை நனவாக்க போராடும் பெண்ணாக கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

அவரது அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ், விவசாயிகளின் பிரச்சனைகளை உணர்வுபூர்வமாக உணர்த்தியுள்ளார். அறிமுக நாயகனாக வலம் வந்தாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார், தர்ஷன். இதற்கு வலுசேர்க்கும் விதமாக நெல்சன் திலிப்குமாராக வலம் வரும் சிவகார்த்திகேயன், ஒரு எனர்ஜி பூஸ்டராக தெரிகிறார்.

இப்படம் வெளியானது முதல் மலேசியாவில் அனைத்து திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, முக்கியமாக இளைஞர்கள் பலர், தாங்கள் தம் கனவுகளை நோக்கி பயனிக்க இப்படம் ஊக்குவித்ததாக, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மலேசியாவில், சிவகார்த்திகேயனின் ரசிகர் மன்றமாகிய, மலேசியா எஸ்.கே.எஃப்.சி கோலாலம்பூர் மற்றும் ஜோகூர்பாரு ஆகிய இரு இடங்களில் முதல் நாள் ரசிகர்கள் காட்சியைத் திரையிட்டது. அங்கு குவிந்த ரசிகர்கள் படத்தைப் பார்த்துக் கொண்டாடினர்.

மேலும், இப்படம் ஊக்குவிக்கும் விதமாக இருப்பதால், யாயாசன் செரிபு ஹராப்பன் மலேசியாவில் உள்ள குழந்தைகளுக்கும் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியைத் மலேசிய ரசிகர் மன்றம் திரையிட்டது. அப்போது, குழந்தைகள் இப்படத்தை வெகுவாக ரசித்தனர். மேலும், இப்படம் அவர்கள் கனவை நோக்கி பயணிக்க ஊக்குவித்ததாக தெரிவித்தனர்.