புக்கிட் மெர்தாஜாம், மார்ச் 1-

புக்கிட் மெர்தாஜாம் நோக்கி செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 144.6ஆவது கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ந்த விபத்தில் தமிழ் ஆசிரியர் சங்கீதா மரணமடைந்தார்.

இச்சம்பவம் நேற்று மதியம் 2.30 மணியளவில் நிகழ்ந்ததாகவும் பள்ளிக்கூடம் முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சங்கீதாவை (வயது 35) லாரி ஒன்று மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் செபெராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் நிக் ரோஸ் அஷான் நிக் அபு ஹாமிட் தெரிவித்தார்.

60 வயதுடைய லாரி ஓட்டுநர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் சங்கீதாவின் உடல் சவப்பரிசோதனைக்காக புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

பினாங்கில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஆசிரியர் சங்கீதாவின் இந்த திடீர் மரணம் அனைவரையும் நிலைகுலையச் செய்துள்ளது. மாணவர்களுடன் அன்பாகப் பழகும் ஆசிரியர்களில் ஒருவரான சங்கீதா மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு பலதரப்பட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார்.

ஆசிரியை சங்கீதாவிற்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். பள்ளிக்கு எப்பொழுதும் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் அவர் விபத்துக்குள்ளாகி மரணமுற்றது அவரது குடும்பத்தினரை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.