செமினி, மார்ச் 1-
செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்களின் மகத்தான ஆதரவின் அடிப்படையில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் இத்தொகுதியை மீண்டும் தற்காத்துக் கொள்ளும் என மலேசிய நீதி கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நீர் இயற்கை வள சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் ஜெயக்குமார் தலைமையில் செமினி சட்டமன்றத் தொகுதியில் மாபெரும் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் முகைதின் யாசின், டத்தோ ஶ்ரீ அன்வார் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.
தேசிய முன்னணி ஆட்சி காலத்திற்கு பிறகு நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் புது மலேசியா என்ற நடைமுறையில் பல தரப்பட்ட செயல் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார். ஆட்சி அதிகாரத்தை நம்பிக்கை கூட்டணி கைப்பற்றி இன்னும் ஒரு ஆண்டு கூட நிறைவாகவில்லை. அதற்குள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற கேள்வியை முன் வைக்கின்றார்கள்.
மக்களுக்காக வழங்கிய அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அதோடு அவர்களின் மகத்தான ஆதரவின் அடிப்படையில் இந்த சட்டமன்ற தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என சூளுரைத்தார்.
மலேசிய இந்தியர்களின் வாழ்வாதாரத்திற்கு எம்மாதிரியான திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பது குறித்து நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தொடர்ந்து சிந்தித்து வருவதாக அமைச்சர் சேவியர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களின் மிகப்பெரிய ஆதரவின் அடிப்படையில் இத்தொகுதியை நாங்கள் மீண்டும் வென்றெடுப்போம். இன்று மக்கள் எங்களுக்கு வழங்கி இருக்கின்ற இந்த மகத்தான ஆதரவு வரும் காலங்களிலும் தொடரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்போது மக்களின் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆட்சியில் மக்களுக்கு என்ன தேவை என்பது குறித்து மட்டுமே நாங்கள் சிந்திக்கின்றோம் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார். இத்தொகுதியில் வெற்றி பெறுவது நம்பிக்கை கூட்டணிக்கு மிக அவசியமாகும். இத்தொகுதியில் வெற்றி பெறுவதும் வழி இவ்வட்டாரத்தில் உள்ள இந்தியர்களின் பிரச்சனைக்கும் சிறந்த தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை வாக்குறுதியையும் அவர் வழங்கினார்.
1,500 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது அதோடு கண்கவர் பரிசுகளும் இதில் வழங்கப்பட்டது.