ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ஆயக்ஸ் ஆம்ஸ்டர்டாமிடம் மண்டியிட்டது ரியல் மாட்ரிட் !
விளையாட்டு

ஆயக்ஸ் ஆம்ஸ்டர்டாமிடம் மண்டியிட்டது ரியல் மாட்ரிட் !

மாட்ரிட், மார்ச்.6-

ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான ரியல் மாட்ரிட் தனது சொந்த அரங்கில் ஹாலந்தின் ஆயக்ஸ் ஆம்ஸ்டர்டாமிடம் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 4 முறை சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்று அதிரடி படைத்த ரியல் மாட்ரிட், கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக அக்கிண்ணத்தை வென்று ஹாட்ரீக் சாதனையைப் படைத்திருக்கிறது.

கடந்த வாரம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 2 – 1 என்ற கோல்களில் ஆயக்ஸ் ஆம்ஸ்டர்டாமை வீழ்த்திய ரியல் மாட்ரிட் தனது சொந்த அரங்கில் எளிதில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது. எனினும் இளம் ஆட்டக்காரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆயக்ஸ் ஆம்ஸ்டர்டாம் அணியிடம் ரியல் மாட்ரிட் படுதோல்வி அடைந்துள்ளது.

கடந்த ஏழு நாட்களில் கோப்பா டெல் ரே கிண்ணப் போட்டியில் தனது பரம வைரியான பார்சிலோனாவிடம் தோல்வியைத் தழுவிய ரியல் மாட்ரிட், சனிக்கிழமை எல் கிலாசிக்கோ ஆட்டத்திலும் பார்சிலோனாவிடம் தோல்வி கண்டது. இந்நிலையில் ஆயக்ஸ் ஆம்ஸ்டர்டாமிடம் ஏற்பட்டுள்ள தோல்வி ரியல் மாட்ரிட்டுக்கு மிக மோசமான வாரமாக அமைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட்டுக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது அந்த அணியில் இல்லை. அதேவேளையில் இறுதி ஆட்டங்களில் ரியல் மாட்ரிட்டைக் காப்பாற்றிய கேரத் பேல் மீண்டும் முதன்மை அணியில் களமிறக்கப்படவில்லை.

ரியல் மாட்ரிட்டின் இந்த தோல்வி அந்த அணியின் தலைவர் பிலாரென்டினோ பேரேசுக்கு மிகப் பெரிய நெருக்கடியைக் கொடுத்துள்ளது. ரியல் மாட்ரிட்டின் நடப்பு பயிற்றுனர் சந்தியாகோ சொலாரியை நீக்குவது குறித்து பிலாரென்டினோ தற்போது ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன