ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > வழக்கிற்கும் ஆலயத்தின் பணம்தான் பயன்படுத்தப்பட்டது! – வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

வழக்கிற்கும் ஆலயத்தின் பணம்தான் பயன்படுத்தப்பட்டது! – வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி

கோலாலம்பூர், மார்ச் 6-
ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா குறித்து யாரேனும் ஏதாவது குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் உடனடியாக அவர்கள் மீது வழக்கு தொடுப்பது வாடிக்கையாக இருந்து வந்தது. அந்த வழக்கை முன்னெடுப்பதற்கும் ஆலயத்தின் பணம் தான் பயன்படுத்தப்பட்டது என வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்ரீ மகாமாரியம்மன்  தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் மீதும் அதன் தலைவர் மீதும் அதிர்ச்சி கொண்டவர்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர். அந்த தொகுப்புகளை தமிழ் மலர் நாளேடு தொடர்ந்து வெளியிட்டு வந்தது. இதற்காக தங்கள் நான் இதன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கபட்டதையும் சரஸ்வதி கந்தசாமி நினைவுகூர்ந்தார். இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் மனோகரன், பூச்சோங் முரளி, பாரதிதாசன், உட்பட பலர் பாதிக்கப்பட்டார்கள்.

மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் என்ற முறையில் டான்ஸ்ரீ நடராஜா முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்கதையாகி வந்தது.

அவர்களை கருப்பு பட்டியலில் இணைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வழக்குகள் முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்பில் டான்ஸ்ரீ நடராஜா தரப்பில் 15 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஆலயத்தின் பணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

1930ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் சட்டத்தின்கீழ் ஆலயத்தின் பணத்தை மூன்று விவகாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆலயத்தின் நிர்வாகம், சமூக நடவடிக்கைகள், கல்விக்கடன் உதவி இந்த மூன்றைத் தவிர்த்து வேறு எதற்கும் ஆலயத்தின் பணத்தை பயன்படுத்தக் கூடாது என்பது அந்த சட்ட திட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை மீறியும் ஆலயத்தின் பணம் வழக்குகளின் செலவினங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமே நாங்கள் முன் வைத்து விட்டோம். இது குறித்து போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என அவர் தெரிவித்தார். தற்போது ஆலய விவகாரம் தொடர்பில் டான்ஸ்ரீ நடராஜா மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தையும் அவர்கள் விசாரிக்க வேண்டுமென சரஸ்வதி கந்தசாமி கேட்டுக்கொண்டார்.

தமிழ் மலர் நாளிதழ் மக்கள் முன்னெடுக்கும் பிரச்சனையை மக்களுக்கு ஏற்படும் அநீதியை எடுத்துரைக்கும் நாளிதழாக விளங்கி வருகின்றது. ஆனால் எங்கள் மீதும் டான் ஸ்ரீ நடராஜ வழக்கு தொடுத்தார். அதனால் 7 லட்சம் வெள்ளி செலுத்த வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் இப்பொழுது இருக்கிறோம் என அவர் பத்திரிக்கையின் நிர்வாகி டத்தோ பெரியசாமி கூறினார்.

டான்ஸ்ரீ நடராஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவரை கடந்த காலத்தில் பல மூத்த அறிஞர்களும் தலைவர்களும் தற்காத்து வந்ததாக வழக்கறிஞர் மனோகரன் குறிப்பிட்டார்.

நடப்பு அரசாங்கம் குறிப்பாக லஞ்ச தடுப்பு ஆணையம் தற்போது டான்ஸ்ரீ நடராஜா மீது நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. இந்த விசாரணை நிச்சயமாக சிறப்பான முறையில் நடைபெறும் என்றும் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றும் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன