ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > யூரோப்பா லீக் – டைனமோ கியேவ்வை வீழ்த்தியது செல்சி !
விளையாட்டு

யூரோப்பா லீக் – டைனமோ கியேவ்வை வீழ்த்தியது செல்சி !

லண்டன், மார்ச். 8-

2018/19 யூரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி 16 அணிகள் பங்கேற்ற சுற்றில் செல்சி  3- 0 என்ற கோல்களில் உக்ரேனின் டைனமோ கியேவ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதி சுற்றுக்குத் தகுதிப் பெறும் தனது வாய்ப்பை செல்சி பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

அடுத்த பருவத்தில் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் செல்சி யூரோப்பா லீக் கிண்ணத்த வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் செல்சி, டைனமோ கியேவ்வுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

17 ஆவது நிமிடத்தில் செல்சியின் முதல் கோலை பெட்ரோ அடித்தார். ஒலிவர் ஜீரோட் கொடுத்த பந்தை பெட்ரோ லாவகமாக கோலாக்கினார். முதல் பாதி ஆட்டம் 1 – 0 என்ற கோலில் செல்சிக்கு சாதகமாக முடிவடைந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தின் அற்புதமான பிரீ கீக் மூலம் விலியன் செல்சியின் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஹட்சன் ஓடோய் செல்சியின் மூன்றாவது கோலைப் புகுத்தினார். இந்த ஆட்டத்தில் செல்சி அதிகமான கோல்களைப் போட்டிருக்கலாம் என அதன் நிர்வாகி மவுரிசியோ சாரி தெரிவித்தார். எனினும் சொந்த அரங்கில் எந்த ஒரு கோலையும் விடாததால், இரண்டாவது ஆட்டம் செல்சிக்கு சாதகமாக அமையலாம் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன