கோலாலம்பூர், மார்ச்.8-

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்தில் அந்த கூட்டணியை கலைப்பது தொடர்பில் எந்த ஒரு முடிவும் எட்டப்பட வில்லை என தேசிய முன்னணியின் இடைக்கால தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணியைக் கலைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ம.சீ.ச. தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் இன்றைய கூட்டத்தில் முன் மொழிந்ததாக முஹமட்  ஹசான் கூறினார். ஆனால் தாம் அந்த தீர்மானத்துக்கு உடன்படவில்லை என அவர் கூறினார். தேசிய முன்னணி இன்னமும் வலுவுடன் இருக்கிறது. எனவே அதனை கலைக்க வேண்டிய அவசியமில்லை என முஹமட் ஹசான் தெரிவித்தார்.

இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய தேசிய முன்னணி உச்சமன்ற கூட்டத்தில் ம.இ.கா. தலைவர் டான் ஶ்ரீ எஸ். ஏ விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார். கடந்த திங்கட்கிழமை தேசிய முன்னணியை விட்டு வெளியேறி புதிய கூட்டணியைத் தேடப் போவதாக ம.இ.கா-வும் ம.சீ.ச-வும் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தன.

எனினும் தேசிய முன்னணியைக் கலைப்பதற்கான தேவை ஏற்படவில்லை என்பதை அம்னோவும் , ம.இ.கா-வும் நன்கு உணர்ந்திருப்பதாக முஹமட் ஹசான் தெரிவித்தார்.