ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > சாம்பியன்ஸ் லீக் – காலிறுதி ஆட்டத்தில் லிவர்புல் !
விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் – காலிறுதி ஆட்டத்தில் லிவர்புல் !

மூனிக், மார்ச்.14-

ஐரோப்பிய வெற்றியாளர் லீக் ( சாம்பியன்ஸ் லீக் ) கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்தின் லிவர்புல் தகுதிப் பெற்றுள்ளது. இன்று அதிகாலை நடந்த இரண்டாம் சுற்றுக்கான இரண்டாவது ஆட்டத்தில் லிவர்புல் 3 – 1 என்ற கோல்களில் ஜெர்மனியின் பாயேர்ன் மூனிக்கை வீழ்த்தியது. இதன் வழி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த நான்கு அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்றிருக்கின்றன.

 மூன்று வாரங்களுக்கு முன்னர், அன்பீல்ட் அரங்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் ஏதுமின்றி சமநிலைக் கண்டன. இரண்டாவது ஆட்டம் பாயேர்னின் சொந்த அரங்கமான அலியான்ஸ் அரேனாவில் நடைபெற்ற வேளையில் லிவர்புல் கடும் சவாலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

முதல் பாதி ஆட்டத்தின் 28 ஆவது நிமிடத்தில் லிவர்புல் தாக்குதல் ஆட்டக்காரர் சாடியோ மானே, பாயேர்ன் மூனிக் கோல் காவலர் மானுவேல் நோயரை லாவகமாக ஏமாற்றி முதல் கோலை அடித்தார். லிவர்புலின் அந்த கோலினால் அதிர்ச்சி அடைந்த பாயேர்ன் மூனிக் தனது தாக்குதல்களை அதிகரித்தது.

லிவர்புல் தற்காப்பு ஆட்டக்காரர் ஜோல் மாத்திப் போட்ட சொந்த கோலால் பாயேர்ன் மூனிக் ஆட்டத்தை சமப்படுத்தியது. எனினும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் விஸ்வரூபமெடுத்த லிவர்புல் மேலும் இரண்டு கோல்களைப் போட்டது. வெர்ஜில் வான் டைக் இரண்டாவது கோலைப் போட்ட வேளையில் 84 ஆவது நிமிடத்தில் சாடியோ மானே போட்ட கோல் லிவர்புலின் வெற்றியை உறுதிச் செய்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன