ஜோகூர் பாரு, மார்ச் 14-

இங்குள்ள மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின்  (யுடிஎம்) முதிர்நிலை விரிவுரையாளர் டாக்டர் மலர்விழி பாலகிருஷ்ணன் சென்னையில்   மருத்துவ அறிவியல் துறையில் சிறந்த மகளிர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

இந்தியா, வீனஸ் அனைத்துலக அறவாரியத்தின் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையம் (CARD) ஏற்பாடு செய்த நிபுணத்துவ மகளிர் விருதளிப்பு விழாவில் டாக்டர் மலர்விழிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

ஆய்வு மற்றும் கல்வி துறையில் இடைவிடாது சேவையாற்றி வரும் நிபுணத்துவம் பெண்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

அவ்வகையில் சிறப்பிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நிபுணத்துவ துறை சார்ந்த  பெண்களில் மலர்விழியும் ஒருவராவார்.

இவரோடு யுடிஎம் அறிவியல் துறை பேராசிரியர் நோமி சாலிம் மற்றும் சமூகவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் நோர்ஹானி பக்ரியும் சிறப்பிக்கப்பட்டனர்.

விருது பெற்ற மலேசிய பெண் நிபுணர்கள் பட்டியலில் மலேசிய தேசிய பல்கலைக்கழக (யுகேஎம்) பேராசிரியர் ரோக்கியா ஒமார், யுபிஎம் மற்றும் யுஐஏ பல்கலைக்கழக பேராசிரியர்களும் அடங்குவர்.

சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பஹ்ரேன் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்கள் இவ்விழாவில் சிறப்பு செய்யப்பட்டனர்.

ஏபெக்ஸ் வாரிய கூட்டம் மற்றும் நிபுணத்துவ குழுவின் அறிக்கை வாயிலாக இந்த விருதுக்குத் தகுதியானவர்கள்  தேர்ந்தெடுக்கப்படுவர்.

டாக்டர் மலர்விழி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் அண்மையில்  ‘ i breath’ எனும் ஆஸ்துமாவின் கடுமையை உணரும் கருவியைக் கண்டுபிடித்து அரிய சாதனையைப் படைத்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் 5 ஆண்டு கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றியே இது.இக்கருவி தலைநகரில்  கடந்த ஜனவரி  மாதம்  அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதன் வாயிலாக   மருத்துவ  அறிவியல் துறையினரை தம் பக்கம் திரும்ப வைத்தார் மலர்விழி