புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பேரா முதல்வரைக் கவிழ்க்கும் முயற்சியில் தேசிய முன்னணி சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவு திரட்டும் படலம் தொடர்கிறது -டத்தோ சாரானி தகவல்
அரசியல்முதன்மைச் செய்திகள்

பேரா முதல்வரைக் கவிழ்க்கும் முயற்சியில் தேசிய முன்னணி சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவு திரட்டும் படலம் தொடர்கிறது -டத்தோ சாரானி தகவல்

ஈப்போ, மார்ச் 14-

பேரா மாநில முதல்வருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு அம்மாநில தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டும் வேலை நடந்து கொண்டு இருப்பதாக பேரா தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ சாரானி முகமது தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஒருவர் தேசிய முன்னாணியின் சட்ட மன்ற உறுப்பினர்களை தற்சமயம் சந்தித்துக் கொண்டு இருப்பதாகவும் மத்திய அரசின் முக்கியத் தலைவர்களின் ஆசியும் அனுமதியும் தாம் பெற்று விட்டதாகவும் தற்போதுள்ள முதல்வரான டத்தோ சிறீ அகமாட் ஃபைசால் அசுமுவுக்கிப் பதில் பதவியேறப்போவதாகக் கூறி ஆதரவு திரட்டி வருகிறார் என டத்தோ சாரானி தெரிவித்துள்ளார்.

தற்சமயம் மாநிலத்தின் அரசியல் நிலையும் ஆட்சி நிலையும் தடுமாறிக்கொண்டிருப்பதாகவும் பேரா முதல்வர் பதவிக்குக் குறி வைத்து ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நேரடியாக அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இவ்விவகாரத்தில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் பேரா மாநில அம்னோ அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

பேரா மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எனும் முறையிலும் மாநில அம்னோவின் தலைவர் என்ற முறையிலும் தற்சமயம் அம்மாநிலத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது பற்று நன்கு அறிந்திருப்பதாகத் தெரிவித்த அவர், தேசிய முன்னணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த ஆதரவு திரட்டும் படலத்திற்கு ஒரு போதும் இணங்கப்போவதில்லை என அவர் தெரிவித்தார்.

இதில் ஈடுபட்டிருக்கும் அந்த நபரின் செயலுக்கு ஆதரவு தெரிவிப்பதால் மாநிலத்திற்கும் மக்களுக்கும் எவ்விதப் பயனும் இல்லை. இதன் தொடர்பில் 25 தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்களும் 3 பாச் கட்சி உறுப்பினர்களும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.

பேரா மாநில நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் அம்மாநில முதல்வர் தன்னைத் தானே சரி பார்த்துக் கொண்டும் தனது கூட்டணியின் உறுப்பினர்களையும் நன்கு கண்காணிக்குமாறும் ஆலோசனை தெரிவித்த அவர், அவருக்கு எதிராகத் திரட்டப்படும் ஆதரவு பற்றியும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என டத்தோ சாரானி தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் இந்தச் சலசலப்பு எதிர்க்கட்சியின் வேலையல்ல, மாறாக உட்கட்சியிலேயே ஏற்பட்ட தலைமைத்துவப் பூசல் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், பேரா மாநில முதல்வர் டத்தோ சிறீ அகமாட் ஃபைசால் அசுமுவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்காக தேசிய முன்னணியின் சட்ட மன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டும் படலம் ஏற்கனவே அந்த நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக் குழு உறுப்பினரால் நடத்தப்பட்டது. இதன் தொடர்பில் 6 தே.மு. சட்ட மன்ற உறுப்பினர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் முக்கிய விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன