புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > வெற்றியுடன் மீண்டும் பயணத்தை தொடங்கிய சிடான் !
விளையாட்டு

வெற்றியுடன் மீண்டும் பயணத்தை தொடங்கிய சிடான் !

மாட்ரிட், மார்ச்.17 – 

ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியல் மாட்ரிட்டின் நிர்வாகியாக மீண்டும் பொறுப்பேற்றுள்ள சினிடின் சிடான், வெற்றியுடன் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். சனிக்கிழமை சந்தியாகோ பெர்னாபூ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட், 2 – 0 என்ற கோல்களில் செல்தா வீகோவை வீழ்த்தியது.

செல்தா வீகோவுக்கு எதிரான ஆட்டத்தில் சிடான் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்திருந்தார். குறிப்பாக முந்தைய நிர்வாகி சந்தியாகோ சொலாரியில் ஒதுக்கப்பட்டிருந்த கோல் காவலர் கெய்லோர் நாவாஸ், தற்காப்பு ஆட்டக்காரர் மர்சேலோ, மத்திய திடல் ஆட்டக்காரர்கள் இஸ்கோ, காஸ்மீரோவுக்கு முதன்மை அணியில் சிடான் வாய்ப்பு வழங்கியிருந்தார்.

சிடானின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் 60 ஆவது நிமிடத்தில் இஸ்கோ முதல் கோலைப் போட்டார். 77 ஆவது நிமிடத்தில் கேரத் பேல் போட்ட இரண்டாவது கோல் ரியல் மாட்ரிட்டின் வெற்றியை உறுதிச் செய்தது. ஸ்பெயின் லா லீகா போட்டியில் இன்னும் 11 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

இந்நிலையில் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவைத் துரத்தி பிடிக்க முடியாது என்பதை தாம் உணர்ந்திருப்பதாக சிடான் தெரிவித்தார். எனினும் ரியல் மாட்ரிட் அணியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்ள விருப்பதாக சிடான் மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன