கோலாலம்பூர் ஆகஸ்ட் 2-

வறுமைக் கோட்டின் கீழ் உள்ள இந்தியர்களை பொருளாதார ரீதியில் உயர்த்தி இந்திய சமுதாயத்தின் சொத்துடைமையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட சிலாங்கூர் – விலாயா இந்திய வர்த்தக சங்கம் அதன் இலக்கை எட்டும் வரை போராடும் என அதன் தலைவர் விஜய் ஈஸ்வரன் தெரிவித்தார்.

புறநகர் பகுதிகளில் இருக்கும் இந்தியர்களின் சொத்துடமையை உயர்த்த வர்த்தகமே சிறந்த தளம் என்பதை மக்கள் உணரும் வகையில் தங்களது செயல்திட்டங்கள் அமையும் என்பதையும் அவர் தெரிவித்தார். சுபிபா என அழைக்கப்படும் இந்த வர்த்தக சங்கம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரையில் பல இந்திய சிறுதொழில் வர்த்தகர்களுக்கு வர்த்தக வழிகாட்டலை நாம் வழங்கியிருக்கின்றோம் என்று விஜய் ஈஸ்வரன் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டிற்குள் 2000 தொழில்முனைவோர்களை உருவாக்கி அவர்கள் ஆண்டிற்கு 10 லட்சம் சம்பாதிக்கும் வர்த்தகர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். தற்போது நமது நாட்டில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. இவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தங்களின் தொழிலை எப்படி இன்னும் மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கான வழிமுறைகளையும் நாங்கள் தருகின்றோம்.

சிறுதொழில் இருந்து தொடங்கி தங்கள் வர்த்தகத்தை பெருமளவில் வளர்த்துக் கொண்ட வர்த்தகர்களும் நமது சங்கத்தில் இருப்பதால் நம்மால் இவர்களுக்கு வழி காட்டுகிறது என்றார் அவர். நமது சமுதாயம் ஒன்றுபட வேண்டும் என்றால் பொருளாதார ரீதியில் நாம் உயர வேண்டும். நம்மிடையே பொருளாதார பலம் இருந்தால் நமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ளலாம்.

தற்போது தொழில் புரட்சி 4.0 நோக்கி உலகம் பயணித்துக் கொண்டிருக்கின்றது. சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களையும் இதன் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கின்றது என விஜய் ஈஸ்வரன் குறிப்பிட்டார். சங்கத்தில் மொத்தம் 240 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் அதில் 140 பேர் ஆயுள்கால உறுப்பினர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக தயாளன், செயலாளராக டாக்டர் ராக்கன், பொருளாளராக விஜய் பட்டேல் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சியாக உழைப்பால் உயர்ந்த வர்த்தகர்கள் எனும் விருது விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிஜே சிவிக் சென்டரில் இவ்விழா நடைபெறுகின்றது. வர்த்தகத்தில் ஈடுபட்டு பொருளாதார ரீதியில் தங்களை உயர்த்திக் கொண்ட இளம் வர்த்தகர்களை அடையாளம் கண்டு அவர்களை கவுரவிக்கும் ஒரு விழாவாக இது அமைகின்றது.

இதில் பல்வேறு வர்த்தக துறையைச் சேர்ந்த 12 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. புறநகர் மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் ஆர் சிவராசா இவ்விழாவிற்கு தலைமை ஏற்கிறார். தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ சகாதேவன் நமது சங்கத்தின் காப்பாளராக செயல்படும் வேலையில் வர்த்தகர் எண்ரிகோஸ் சுந்தரம் ஆலோசகராக பணியாற்றுகிறார். இந்த நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு0166661347 டாக்டர் ராக்கனை தொடர்புக் கொள்ளலாம்.