சிப்பாங், ஆகஸ்ட் 2-

மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB), KLIA மற்றும் குறைந்த கட்டண விமான நிலையமான klia2-வை ஒருங்கிணைக்க முன்மொழிந்திருக்கும் திட்டத்தைக் காட்டிலும் klia2-இல் காணப்படும் முக்கிய செயல்பாட்டு விவகாரங்களுக்கும் பயணிகளின் அனுபவ சிக்கல்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டுமென ஏர் ஏசியா கோரிக்கை விடுத்துள்ளது.

மலேசிய வானூர்தி ஆணையத்தினால் (MAVCOM) அங்கீகரிக்கப்பட்ட அத்திட்டம், ஒரு முறையான செயலமைப்பைக் கொண்டிருக்கவில்லை என்றாலும் பலரின் உரையாடலின் தலைப்பாக அமைந்துள்ளது.  இவ்விவகாரத்தில் MAHB, klia2-இல் 97 சதவீதம் பயணிகள் போக்குவரத்தைக் கொண்டு வரும் இரு முக்கிய விமான நிலைய நடத்துனரைக் கருத்தில் கொள்ளவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏர் ஏசியா மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரியாட் அஸ்மத் கூறுகையில், “KLIA மற்றும் klia2- வை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் மூலதன செலவிற்காம தீவிர திட்டங்களை முதலில் நிறுத்த வேண்டும். மாறாக, MAHB பல முதன்மை சிக்கல்களை களைவதில் அக்கறை காட்ட வேண்டும்.

MAHB-இன் கவனம், விமான வரியின் மூலம் கிடைத்த வசூலைக் கொண்டு klia2-இம் வசதிகளை KLIA தரத்திற்குச் சீரமைப்பதிலும் விமானத் தளத்தை சரி செய்யவும் மற்றும் பயணிகளின் வசதிக்கேற்ப ஓய்வு பகுதி, போர்டிங் வாயில்களைத் தரமாக அமைப்பதிலும் இருக்க வேண்டும். தொழில்நுட்ப ரீதியிலும் பயணிகளின் ஒட்டுமொத்த அனுபவத்தை மிளிரச் செய்வதில் MAHB பின்னடைவைக் காட்டுகிறது.

“கூடுதல் விமான வரியைக் கொண்டு விமான நிலைய நெரிசலைக், குறிப்பாக அனைத்துலக பினாங்கு விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகள் நெரிசலைக் களைய குறுகிய செக்-இன் தளங்களை மறுசீரமைப்பு செய்யலாம்.”

ஏர் ஏசியா X மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பென்யமின் இஸ்மாயில் கூறுகையில், “எங்களின் இலக்கு எப்பொழுதுமே ஆசியாவின் குறைந்த கட்டண விமான சேவையை வழங்குவதை மையமாகக் கொண்டுள்ளது. அதில் நிச்சயமாக, மலேசிய மக்களுக்கும் அதன் சுற்றுலாத்துறைக்கும் நெடுந்தூர பயணிகள் அதாவது ஆஸ்திரேலியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாட்டிலிருந்து வரும் பயணிகள் தடையின்றி தொடர்பு கொள்ளும் ஒரு தளமாகவும் அமைகின்றது.

ஆக, இதனைக் கருத்தில் கொண்டு, தேவையற்ற ஒரு திட்டத்திற்காக பயணிகளின் கடின உழைப்பின் வழி வசூலித்த பணத்தை வெறுமனே செலவழிப்பதை ஒருபோதும் எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

“இந்த இரு விமான ஒருங்கிணைப்பு திட்டத்தின் வழி எந்த ஒரு நன்மையையும் நாங்கள் காணவில்லை. எங்களின் 18 ஆண்டு கால செயல்பாட்டின் அனுபவத்தில் நாங்கள் எந்த ஒரு ஒருங்கிணைப்பு அழைப்பையும் முழு சேவை விமான நிறுவனங்களிடமிருந்து பெற்றதில்லை. இத்திட்டம் மொத்தத்தில் நடைமுறைக்குச் சாத்தியமாகாது. இதனைப் புரிந்து கொள்வதில் MAHB தவறியுள்ளது. இவ்விவகாரம், பயணிகளின் உண்மையான தேவைகளை அறிந்துக் கொள்வதில் MAHB-இன் புரிதலின்மையைக் காட்டுகிறது.

MAHB-யின் முன்மொழிதலுக்கு MAVCOM வழங்கியிருக்கும் அங்கீகாரமும் அதன் உயர்ந்த கட்டணங்களும் MAHB பயணிகளின் நலனில் காட்டும் அக்கறையின்மையை உறுதிபடுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், MAVCOM இயக்கிய ஒழுங்குமுறை சொத்துத் தளத்திற்கேற்ப (RAB), MAHB-யின் வருவாயை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் மட்டுமே முனைப்பு காட்டுவதை நியாயப்படுத்துகிறது.