கோலாலம்பூர், ஆக.6-

ஆரம்பப் பள்ளி நான்காம் ஆண்டிற்கான தேசிய மொழி பாடம் வழி அரேபிய சித்திர மொழியை (ஜாவி) அறிமுகப்படுத்தவிருக்கும் கல்வியமைச்சின் நடவடிக்கைக்கு எதிராக கெராக்கான் உதவி தலைவர் டத்தோ ஜி பரமேஸ்வரன் கண்டனம் தெரிவித்தார்.

ஜாவி மொழியை தமிழ், சீனப் பள்ளிகளில் அமல்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறையை இங்குள்ள பள்ளிகளில் அமல்படுத்த நினைப்பது மாணவர்களுக்கு எந்தவொரு பலனையும் அளிக்காது என்று அவர் குறிப்பிட்டார்.

இதைத் தவிர்த்து, மலாய் மொழிப் பாடத்தில் அரேபிய சித்திரை  மொழி பயின்று இங்கிலாந்து ,அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றால்கூட எந்தவொரு பலனும் கிடைக்கப் போவதில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அறிவியல், கணிதப் பாடங்களை ஆங்கில மொழியில் படித்தால்தான் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில்வதில் சிரமம் இருக்காது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது முன்பு கூறியிருந்ததை பரமேஸ்வரன் நினைவு கூர்ந்தார்.

இந்நிலையில் மலாய் பாடத்தில் ஜாவி சித்திரை மொழியைத் திணிப்பது மாணவர்களுக்கு எந்தவொரு நன்மையையும் தராது என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார்.

இதற்கு முன்பு பள்ளிகளில் கருப்பு நிற காலணியை கல்வியமைச்சு அறிமுகப்படுத்தியது.இதில் எந்தப் பலனும் இல்லை.இப்போது மலாய் பாடத்தில் ஜாவி சித்திரை மொழியைப் புகுத்தும் நடவடிக்கையில் அமைச்சு தீவிரம் காட்டி வருகிறது.

எந்தவொரு புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு கல்வி அமைச்சு பெற்றோர்கள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்தாலோசனை நடத்துவது சாலச் சிறந்தது என்றார் அவர்.

கல்வி என்பது ஒரு மாணவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியது. ஒவ்வோர் அம்சத்தையும் அணுக்கமாக ஆராய்ந்த பின்னரே ஒரு திட்டத்தைக் கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு ஏற்புடைய திட்டத்தை அமல்படுத்தினால் மட்டுமே ஆக்கபூர்வ பலன்களைக் காண முடியும். ஆகையால், தமிழ், சீனப் பள்ளிகளில் மலாய் பாடத்தில் ஜாவி சித்திரை மொழியைத் திணிப்பதை கல்வி அமைச்சு நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்விவகாரத்தை அரசியல் தளமாக்கும் போக்கை பக்காத்தான் அரசாங்கம் கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.