புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > துணையமைச்சர் தியோ நீ சிங் பதவி விலக  வேண்டும்! -கெராக்கான் வலியுறுத்து
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

துணையமைச்சர் தியோ நீ சிங் பதவி விலக  வேண்டும்! -கெராக்கான் வலியுறுத்து

கோலாலம்பூர், ஆக.6-

துணை கல்வியமைச்சர் தியோ நீ சிங் சீன சமூகத்தினரின்  நம்பிக்கையை இழந்துவிட்டதைத் தொடர்ந்து அவர் தனது பதவியைத் துறக்க வேண்டும் என்று கெராக்கான் தேசிய தலைவர் டோமினிக் லாவ்  ஹோ சாய் வலியுறுத்தினார்.

அரேபிய சித்திர மொழி விவகாரத்தில் துணை அமைச்சரின் பங்களிப்பை கல்வி அமைச்சர் டத்தோ மஸ்லி மாலிக் பாராட்டியிருப்பதன் மூலம் சீன சமூகத்தை தியோ விற்றுவிட்டார் என்பது உறுதியாகிறது. எனவே அவர் தனது பதவியை உடனடியாகத் துறக்க வேண்டும் என்று டோமினிக் லாவ் கேட்டுக் கொண்டார்.

நான்காம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் அரேபிய சித்திர மொழி அறிமுகப்படுத்தப்படும் என்ற கல்வி அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து சீன சமூகம் வெளிப்படுத்திய எதிர்ப்பை தியோ சற்றும் பொருட்படுத்தவில்லை. எனவே,  அவர் சீன சமூகத்தைப்  பிரதிநிதித்து  துணை கல்வியமைச்சராகப் பணியாற்றும் தகுதியை இழந்துவிட்டார் என்றார் அவர்.

சீன சமூகம் எழுப்பிய கேள்விகளுக்கு தியோ உண்மையாக செவிசாய்த்திருந்தால் நிலைமை இவ்வாற்றாக இருந்திருக்காது. குறைந்த எண்ணிக்கையிலானோர் மட்டுமே அமைச்சின் நடவடிக்கையை எதிர்த்திருந்தால், சமூக வலைத்தளங்களில் இத்தகைய கடுமையான விமர்சனங்களைக் காண முடியாது. சீன சமூகத்தின் நம்பிக்கையை தியோ தற்போது இழந்துள்ளதால் அவர் பதவி துறப்பதே சிறப்பு  என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் கேட்டுக் கொண்டார்.

60 ஆண்டு காலமாக இருந்த தற்காப்பு அரணை தகர்த்துவிட்டு சீனப் பள்ளிகளில் ஜாவி மொழி பயன்பாட்டை அறிமுகம் செய்வதற்கு தியோவிற்கு ஓர் ஆண்டு மட்டுமே தேவைப்பட்டுள்ளது. இது பக்காத்தான் அரசாங்கத்திற்கு இவர்  ஆற்றிய பெரும் பங்களிப்பாகும். மேலும், பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்தின் சிறந்த துணை கல்வி அமைச்சராக இவர் விளங்குகிறார் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக் காட்டாகும் என்றார்.

அதே வேளையில், இந்த அரேபிய சித்திர மொழி அமலாக்கத்திற்கு  ஜசெக தலைவர்களில்  ஒரு சிலர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டுள்ளார். இதன் வழி  11 ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள், 14 ஜசெக இளைஞர் பிரிவு  தலைவர்கள், 138 ஜசெக கிளைகள் மற்றும் கட்சியின் அடிமட்ட தலைவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தை எதிர்த்துள்ளதாக  கெராக்கான் கருதுகிறது என்றார்.

உண்மையில், அரேபிய சித்திர மொழியை கெராக்கான் எதிர்க்கவில்லை. மாறாக, அது சீனப் பள்ளிகளில் கட்டாயமாகப் புகுத்தப்படுவதையே இக்கட்சி எதிர்க்கிறது என்பதை  டோமினிக் லாவ் தெளிவுபடுத்தினார்.

கெராக்கான் ஒரு பல்லின அரசியல் கட்சியாகும். பல்லின மக்களிடையே கலாச்சார பரிமாற்றம் ஏற்படுவதற்கு இக்கட்சி ஆதரவு தெரிவித்து வந்துள்ளது. ஆயினும், தீவிர இன, சமய மற்றும் கலாச்சார மேலாதிக்கத்தை  இது கடுமையாக எதிர்க்கிறது.  இந்த அரேபிய சித்திர மொழியைப்  புறப்பாட நடவடிக்கைகளில் ஒன்றாக சீனப் பள்ளிகளில் அரசாங்கம் போதிக்க விரும்பினால் அதை கெராக்கான் வரவேற்கும். மாணவர்களின் விருப்பத் தேர்வு பாடமாக இது அமல்படுத்தப்பட்டால் கட்சி இதை ஆதரிக்கும் என்றும் அவர் சொன்னார்.

இந்த விவகாரத்தில் பொது மக்கள் குறிப்பாக சீன சமூகத்தினர் அமைதி காக்க வேண்டுமே தவிர ஆவேசப்படக் கூடாது . இவ்விவகாரம் சுமூகமாகவும் நியாயமாகவும் தீர்க்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.

இதன் பொருட்டு சீன  சமூகத்தின்  அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் சீனப் பள்ளிகளில் அரேபிய சித்திர மொழி அமலாக்கத்தை ரத்து செய்யும்படி அரசாங்கத்தைக் கோரும்  மகஜர் ஒன்றை கெராக்கான் தயார்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன