முகப்பு > சமூகம் > வர்த்தகத்தில் சாதனை படைத்த 9 இந்தியர்களுக்கு சுவிபாவின் ‘உழைப்பால் உயர்ந்த வர்த்தகர்’ விருது
சமூகம்முதன்மைச் செய்திகள்

வர்த்தகத்தில் சாதனை படைத்த 9 இந்தியர்களுக்கு சுவிபாவின் ‘உழைப்பால் உயர்ந்த வர்த்தகர்’ விருது

பெட்டாலிங் ஜெயா, ஆக 11-

வாழ்வில் பல சவால்களைக் கடந்து இன்று வர்த்தக துறையில் வெற்றி பெற்றிருக்கும் 9 இந்திய வர்த்தகர்களுக்கு சுவிபா எனப்படும் சிலாங்கூர், கூட்டரசு பிரதேச இந்திய வர்த்தகர் சங்கம் ‘உழைப்பால் உயர்ந்த வர்த்தகர்’ விருதை வழங்கி கெளரவித்தது.

மற்ற இனத்தவர்களைப் போல நம் சமுயாத மக்களும் வர்த்தகத்தில் சிறந்து விளக்க வேண்டும் என்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு பொருளாதார ரீதியில் தங்களை உயர்த்திக் கொண்ட வர்த்தகர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த விருது வழங்கப்பட்டதாக சுவிபா சங்கத்தின் தலைவர் விஜய்ஸ்வரன் தெரிவித்தார்.

சிறுதொழிலை தொடங்கியவர்கள் பல இன்னல்களை கடந்து வர்த்தகத் துறையில் அனுபவம் வாய்ந்தவர்களாக திகழ்கின்றனர். திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ற வர்த்தகர்களை அடையாளம் கண்டு வழங்கப்படும்  இந்த விருது விழா தொடர்ந்து நடத்த சுவிபா முயற்சிக்கும் என்று நேற்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற விருது விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விருது விழாவில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட புறநகர் மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் ஆர்.சிவராசா கூறுகையில், வர்த்தகர்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்கும் சுவிபாவிற்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அமைச்சு எப்போதும் ஆதரவு வழங்கும் என்றும் அவர் கூறினார்.

பெரும்பாலோர் வர்த்தகத் துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதோடு பல சாதனைகளையும் புரிந்து வருகின்றனர். ஆனால், இன்னும் சிலர் குறிப்பாக புறநகர் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் அதற்கான வழிகளும் அணுகுமுறைகளும் தெரியாமல் தடுமாறுகின்றனர். அவர்களுக்கு வர்த்தகத்தில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கு அமைச்சு பல திட்டங்களை ஏற்படுத்தி தருகின்றது என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் வர்த்தகத்தில் சாதனை புரிந்த ரமேஸ்சந்திரா பட்டேல்,  டத்தோஸ்ரீ ஆர்.ஜெயேந்திரன், டத்தோ ரவிசங்கர், வசந்தன் சிதம்பரம், சிவகுமார் சுப்ரமணியம், விக்னேஸ்வரன் சுப்ரமணியம், புவனேஸ் சுப்ரமணியம், சுப்ரமணியம் முனியாண்டி, டத்தோ சுரேஸ் ராவ் ஆகியோருக்கு  விருது வழங்கப்பட்டது.

நம் சமுதாயத்தில் பொருளாதார நிலைமாறுபட வேண்டும் என்பதில் சுவிபா தெளிவாக உள்ளது. சிறு வியாபாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வியாபார நுணுக்கங்களையும் பயிற்சிகளையும் வழங்கவும் சுவிபா தயாராக உள்ளது. மற்றவர்களிடம் கைகட்டி வேலை செய்யும் நிலையை மாற்றி சிறு தொழில் தொடங்கி பொருளாதார நிலையை மேம்படுத்தி கொள்வதில் நம் சமுதாயத்தினர் முயற்சிக்க வேண்டும் என்றும் சுவிபாவின் செயலாளர் டாக்டர் ராக்கன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன