கோலாலம்பூர், ஆக 12-

யான் பெற்ற இன்பமும் இவ்வையகமும் பெறுக என்பது பழமொழி. அதற்கேற்ப தான் அடைந்த மகிழ்ச்சியைப் போல பல துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களும் பெற வேண்டும் என்ற நோக்கில் இரண்டாவது ஆண்டாக தேசம் ஊடக சாதனையாளர் விருதை ஏற்பாடு செய்திருக்கிறார் தேசம் தோற்றுநர் குணாளன் மணியம்.

பல துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களை அடையாளம் கண்டும் கௌரவிக்கும் ஒரு விழாவாக தேசம் ஊடக சாதனையாளர் விருது திகழ்கிறது. கடந்த 2017 தொடங்கி ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் “தேசம் ஊடக சாதனையாளர்கள் விருது விழா 2018/2019 ஆகஸ்டு 24ஆம் தேதி பண்டார் சௌஜானா புத்ராவில் உள்ள மாசா பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் நடைப்பெறவுள்ளது.

கடந்த 2017இல் ஊடகவியலாளர்களின் சாதனைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் ஊடக பணியாளர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமன்றி கலைத்துறை, விளையாட்டுத் துறை, வர்த்தகத் துறை, அரசின் சார்பற்ற நிறுவன சேவைகள், தமிழ்ப்பள்ளி, பொது சாதனையாளர்கள் என்று பலருக்கு இந்த அங்கீகார விருது வழங்கப்பட்டது.

அதே போன்று இம்முறை நடைபெறும் விருது விழாவிலும் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும் என்று தேசம் இணையத்தள ஆசிரியருமான குணாளன் மணியம் நேற்று தலைநகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பத்திரிகைத் துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் குணாளன் மணியம். அப்போது, பத்திரிகைத் துறையில் பல ஜாம்பவான்கள் இருந்த காலக்கட்டத்திலேயே பல முறை சிறந்த தமிழ் பத்திரிக்கையாளர் என்ற விருதை பெற்றவர் என்ற பெருமை அவரைச் சேரும்.

அப்போதைய பிரதமரும் இந்நாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமட், அப்போதைய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், முன்னாள் பிரதமர் துன் அகமட் அப்துல்லா படாவி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ஆகியோரிடம் சிறந்த தமிழ் பத்திரிகையாளர் விருது பெற்றுள்ளார்.

இதுபோன்ற விருதுகளை பெற்ற குணாளன் மணியம், தான் அடைந்த மகிழ்ச்சியை போன்ற மற்ற சாதனையாளர்களும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 2017ஆம் ஆண்டும் 50 சாதனையாளர்களை அடையாளம் கண்டும் விருது வழங்கினார். அதன் தொடர் முயற்சியாக இவ்வாண்டும் 100க்கும் மேற்பட்ட சாதனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருது வழங்க தயாராக இருக்கிறார்.

இதேபோன்ற விருது விழா இவ்வாண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, 2021ஆம் ஆண்டுக்கான தேசம் ஊடக சாதனையாளர் விருது விழா மொரிசியஸ்சில் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக குணாளன் மணியம் தெரிவித்தார்.

இந்த விருது விழா நிகழ்வுக்கு மாசா பல்கலைக்கழகம், மலிண்டோ நிறுவனம், டிஎச்ஆர் ராகா, மாலிக் ஸ்திரிம் நிறுவனம், சினிபெஸ்ட்ஆதரவாளராக திகழ்கின்றனர்.

இந்த விருது விழாவில் பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி, மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார், மாலிக் ஸ்ரிம் கார்ப்ரேஷன் உரிமையாளர் டத்தோ அப்துல் மாலிக் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொள்ளவிருக்கின்றனர். அதோடு, சின்னத்தம்பி நாடக புகழ் ப்ரஜின், பவானி ரெட்டி உட்பட பல கலைஞர்கள் கலந்து கொள்ளவர்.