கோலாலம்பூர், ஆகஸ்ட் 13-

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக் இந்தியாவிற்கு திரும்ப அனுப்பப் படமாட்டார் என பிரதமர் டாக்டர் மகாதீர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அவர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் என பல தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையிலும் அவர் மலேசியாவில் தான் இருப்பார் என பிரதமர் தெரிவித்தார்.

”ஜாகிர் நாயக் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்புவதில் நாம் பிரச்சினையை எதிர்கொண்டு உள்ளோம்”. ”அங்கு சென்றால் அவருடைய உயிருக்கு ஆபத்து உள்ளது”. ”அதனால் அவர் மலேசியாவில் தான் இருப்பார்” என மகாதீர் குறிப்பிட்டார்.

இதனிடையே ஜாகிர் நாயக்கை மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ள விரும்பினால் அதை மலேசியா வரவேற்பதாக சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தின் ஙாம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட அவர் தெரிவித்தார்.

பிரதமர் டாக்டர் மகாதீரை காட்டிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மீது மலேசிய இந்துக்கள் அதிக விசுவாசம் கொண்டிருக்கிறார்கள் என ஜாகிர் நாயக் கூறிய கருத்து சர்ச்சையாக வெடித்தது. மலேசிய இந்துக்கள் குறித்து தவறான கருத்துக்களை வெளியிட்ட ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மனிதவள அமைச்சர் குலசேகரன் வலியுறுத்தியிருந்தார்.

இந்திய பிரதமர் மீது மலேசிய இந்துக்கள் அதிக விசுவாசம் கொண்டிருக்கிறார்கள் என ஜாகிர் நாயக் கூறிய கருத்து குறித்து மகாதீரிடம் விடப்பட்டபோது அது குறித்து தமக்கு தெரியாது என்றார். ”அதை நீங்கள் அவர்களிடமே கேளுங்கள்”. ”எனக்கு எப்படி தெரியும்”. என செய்தியாளர்களிடம் பதில் அளித்தார்.