வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஜாகிர் நாயக்கை நாட்டில் இருந்து வெளியேற்ற கோரும் கோரிக்கைக்கு சைட் சாடிக் – ரய்ஸ் யாத்திம் ஆதரவு
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஜாகிர் நாயக்கை நாட்டில் இருந்து வெளியேற்ற கோரும் கோரிக்கைக்கு சைட் சாடிக் – ரய்ஸ் யாத்திம் ஆதரவு

கோலாலம்பூர் ஆக 14-

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாயக்கை நாட்டிலிருந்து வெளியேற்றக் கோரும் கோரிக்கைக்கு பெர்சத்து கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சைட் சாடிக் மற்றும் முன்னாள் அமைச்சர் டாக்டர் ரய்ஸ் யாத்திம் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நாட்டில் உள்ள இந்து சமயத்தவர்கள் மற்றும் சீன சமூகத்தை மட்டும் ஜாகிர் நாயக் சாடவில்லை. மாறாக ஒட்டுமொத்த மலேசியர்களையும் அவர் சாடியிருக்கிறார் என இளைஞர் விளையாட்டு துறை அமைச்சருமான சைட் சாடிக் அப்துல் ரஹ்மான் ஊடகங்களுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் தகவலில் கூறியுள்ளார்.

இனம் மற்றும் சமயம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருக்கும் இந்தியப் பிரஜையான ஜாகிர் நாயக்கை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அமைச்சர்கள் கோபிந்த் சிங், எம் குலசேகரன் மற்றும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஆகியோர் அமைச்சரவையில் விடுத்துள்ள கோரிக்கையை தாம் ஆதரிப்பதாக சைட் சாடிக் தெரிவித்துள்ளார்.

நமது சீன மற்றும் இந்திய சகோதரர்களுக்கு எதிராக ஜாகிர் நாயக் வெளியிட்டிருக்கும் தவறான கருத்துகள் ஒட்டுமொத்த மலேசியர்களை அவர் சாடியதாக அர்த்தம் என சைட் சாடிக் சுட்டிக்காட்டினார். கடந்த வாரம் கோத்தாபாருவில் பாஸ் தலைமையிலான கிளந்தான் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றியபோது ஜாகிர் நாயக் இந்நாட்டிலுள்ள இந்திய சமூகத்தவர் மற்றும் சீனர்களை புண்படுத்தக் கூடிய வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

மலேசியர்களின் விசுவாசம் குறித்து ஜாகிர் நாயக் போன்ற வெளியார் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் சைட் சாடிக் கூறினார். சீனர்கள் மற்றும் இந்தியர்களில் பெரும்பாலோர் மலேசியாவை நேசிப்பதோடு நாட்டிற்காக தங்களது உயிரை தியாகம் செய்வதற்கும் தயாராய் இருக்கின்றனர் என்பதும் தமக்குத் தெரியும் என சைட் சாடிக் தெரிவித்தார்.

இதனிடையே ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு வெளியேற்றுவது தான் நல்லது என முன்னாள் அமைச்சர் டாக்டர் ரய்ஸ் யாத்திமும் கூறியுள்ளார் .அவரை இந்தியாவுக்கு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு தாம் ஆதரிப்பதாகவும் ரய்ஸ் தெரிவித்தார்.

இந்நாட்டில்ஜாகிர் நாயக் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றி வருகிறார். பல இனங்களையும் சேர்ந்த நமது மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகிறோம். அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஜாகிர் நாயக்கின் சர்ச்சைக்குரிய உரை அமைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமது டுவிட்டரில் ரய்ஸ் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன