வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பணிகளைத் தோளில் சுமந்து கைகளில் விருது பெற்ற இளைஞர்கள்..!
சமூகம்முதன்மைச் செய்திகள்

பணிகளைத் தோளில் சுமந்து கைகளில் விருது பெற்ற இளைஞர்கள்..!

கற்றல் கற்பித்தல் மட்டுமின்றிச் சீருடை இயக்கத்திலும் மலேசிய இந்தியர்கள் உலக அளவில் சிறந்தவர்கள் என்பதைப் போர்டிக்சன் பண்டார் ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளி ஆசிரியரான குகனேஸ்வரன் தமிழ்மணி மற்றும் அரச சாரணர் பார்த்திபன் காத்தவராயன் ஆகிய இருவரும் அமெரிக்கா சென்று மெய்ப்பித்து உள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 21-ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் வரை அமெரிக்காவில் நடைபெற்ற அனைத்துலகச் சாரணர் ஒன்று கூடும் நிகழ்ச்சியில் சிறந்த முறையில் விளங்கிய இந்த இருவருக்கும் அனைத்துலகச் சாரணர் சேவை 2019  எனும் உயரிய விருது IST (KING SCOUTS)  வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 160 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்தச் சாரணர் இயக்க நிகழ்ச்சியில், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைத் தோளில் சுமந்து, தனித்திறமையைக் காட்டி, கைகளில் விருது பெற்று நாடு திரும்பி இருக்கின்றனர் குகனேஸ்வரனும் பார்த்திபனும்.

அங்குள்ள மாணவர்களுக்குக் கணினி, விளையாட்டு, உட்பட இன்னும் பல துறைகளில் மாணவர்களைச் சிறந்த முறையில் பயிற்றுவித்ததன் மூலம் இவர்கள் சிறந்த பயிற்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுக்குச் சொந்தக்காரர்களாகி உள்ளனர்.

மலேசியாவை பிரதிநித்துச் சென்றதுடன் இப்படி ஓர் அங்கீகாரத்தைப் பெற்று நாடு திரும்பி இருப்பது தங்களுக்கு மிகப் பெரிய ஆனந்தம் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேவேளையில், சேவை உணர்வுடன் பணியாற்றியதுடன் நாட்டின் கலாச்சாரத்தையும் அயல் நாட்டில் பிரதிபலிக்க இது ஓர் அரிய வாய்ப்பு என்றும் குகனேஸ்வரன் குறிப்பிட்டார்.

வகுப்பறை பாடங்களைக் கடந்து புறப்பாட நடவடிக்கைகள் மற்றும் சீருடை இயக்கங்கள் போன்றவை தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்த ஓர் உந்துதலாக அமைவதாக 23 வயதான பார்த்திபன் கூறினார். அதோடு பல நாட்டினருடன் பழகும்போது பல்வேறு மொழிகளில் தம்மை இன்னும் பலபடுத்திக்கொள்ள முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதுபோன்ற வாய்ப்புகளை வரும் காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படுத்திதர இப்போது இருந்தே இது போன்ற நடவடிக்கைகளில் அதிகக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றனர்.

அனைத்துல அளவில் நாட்டில் அடையாளமாகி பெருமையை ஏற்படுத்திச் சிறந்த முன்னுதாரணமாகி இருக்கும் இவர்களுக்கு அநேகன் இணையச் செய்தி தளத்தின் அன்பு வாழ்த்து.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன