புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அமைச்சர்களின் பரிந்துரையை பிரதமர் பரிசீலிக்க வேண்டும்! – பிரபாகரன் வலியுறுத்து
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

அமைச்சர்களின் பரிந்துரையை பிரதமர் பரிசீலிக்க வேண்டும்! – பிரபாகரன் வலியுறுத்து

கோலாலம்பூர். ஆகஸ்ட் 15-

மலேசிய இந்தியர்களின் மனதை தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் பேசிவரும் ஜாகிர் நாய்கை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என அமைச்சரவையில் வலியுறுத்திய நீர், நிலம், இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மனித வள அமைச்சர் குலசேகரன், தொடர்பு பல்லூடகத் துறை அமைச்சர் கோபின் சிங் ஆகியோரின் கருத்தை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அக்கறையுடன் பரிசீலிக்க வேண்டும் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் வழியுறுத்தினார்.

உலக அளவில் தேடப்பட்டு வரும் ஒரு கிரிமினல் குற்றவாளியான ஜாகிர் நாய்க்கிற்குப் பழைய அரசாங்கம் அடைக்கலம் கொடுத்து இருந்தது. சமய உரை என்ற பெயரில் அவர் தொடர்ந்து இந்து சமயத்தை இழிவு படுத்திப் பேசி வந்தார். இந்து சமயத்தினர் செய்த புகார்களைப் பழைய அரசாங்கம் புறக்கணித்தது.

பாக்காத்தான் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தால், இந்து சமயத்தைத் தொடர்ந்து இழிவு படுத்தி வரும் ஜாகிர் நாய்க் நாட்டை விட்டு வெளியே அனுப்பப்படுவார் என நம்பினர்.

ஆனால் தற்போது ஜாகிர்நாய்க்கின் பேச்சு மிக உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. மலேசிய இந்தியர்கள் மலேசியர் பிரதமரை காட்டிலும் இந்திய பிரதமர் மீதுதான் விசுவாசமாக இருக்கிறார்கள் எனச் சொல்லி, நான்கு முறை தலைமுறை காலம் இந்த மண்ணில் வாழ்ந்த, உழைத்த இந்தியர்களின் தியாகத்தை இழிவு படுத்தி உள்ளார்.

இந்தியர்கள் என் மீது விசுவாசமாக இருக்கிறார்கள். அவர்களது விசுவாசத்தைக் கேள்வி எழுப்பாதீர்கள் என ஜாகிர் நாய்க்கை கண்டித்து இருக்க வேண்டிய பிரதமர் துன் மகாதீர் மெளனவாக இருப்பது இந்திய சமூகத்தின் மனதை காயப்படுத்தி இருக்கிறது.

இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய சீன சமூகம் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனத் தனது சொந்த நாட்டில் தேடப்பட்டுவரும் கிரிமினல் குற்றவாளியான ஜாகிர் நாயக் சொல்வது அதிகப்படியான செயல்.

அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றா விட்டால், மலேசிய ஒற்றுமைக்குப் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும். ஜாகிர் நாய்க் இந்த நாட்டில் தொடர்ந்து இருக்க அனுமதிப்பது புதிய மலேசிய இலக்கிற்குப் பாதிப்பாக அமைந்து விடக்கூடும் என்று நாட்டில் இளம் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன