அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஜாகிர் நாயக் விவகாரத்தில்:  மஇகா குரல் ஒலித்தது!
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஜாகிர் நாயக் விவகாரத்தில்:  மஇகா குரல் ஒலித்தது!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18-

ஜாகிர் நாயக் விவகாரத்தில் பாஸ் கட்சி தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்தால், அக்கட்சியுடனான உறவை மலேசிய இந்திய காங்கிரஸ் ஒரு முடிவுக்குக் கொண்டு வருமென அதன் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறியிருப்பது, சமூகத் தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

இன்றைய மக்கள் ஓசை நாளிதழில் முதல் பக்கச் செய்தியாக, டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. உறவை முறிக்கவும் தயார் என்ற தலைப்பில் மலேசிய இந்தியர்களின் விசுவாசம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள ஜாகிர் நாயிக்கிற்குப் பாஸ் கட்சி ஆதரவு தெரிவித்திருப்பது தமது தமக்கு அதிருப்தி அளிப்பதாக டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு அக்கட்சியுடனான உறவையும் ஒத்துழைப்பையும் மறுபரிசீலனை செய்வதற்கும் மஇகா தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.ஜாகிர் நாயக் நடவடிக்கையைப் பாஸ் கண்டித்திருக்க வேண்டுமே தவிர அவருக்கு ஆதரவாகப் பேசியிருக்கக்கூடாது.  ஜாகிர் நாயக்கின் பேச்சு சமய நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நாட்டு இந்தியர்களைக் கேவலப்படுத்தும் எண்ணம் பாஸ் கட்சிக்கு இருக்குமாயின் அவர்களுடனான உறவை முறித்துக் கொள்ளவும் தயங்க மாட்டோம் என டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் இந்தியர்கள் மற்றும் சீனர்களின் ஆதரவு தேவையில்லை என்றால் அதனைப் பாஸ் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அதற்கு ஹாடி அவாங் தயாரா என்ற கேள்வியையும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் முன்வைத்துள்ளார்.

இந்த நாளிதழ் அறிக்கையை மஇகாவின் உறுப்பினர்கள் சமுகத் தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். ஜாகிர் நாயக் விவகாரத்தில் மஇகா ஏன் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் அறிக்கை அமைந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன