வியாழக்கிழமை, ஜனவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஜாகிரைத் தற்காக்க நம்பிக்கைக் கூட்டணிக்கு இந்தியர்கள் வாக்களிக்கவில்லை! – ஹிண்ட்ராஃப்
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஜாகிரைத் தற்காக்க நம்பிக்கைக் கூட்டணிக்கு இந்தியர்கள் வாக்களிக்கவில்லை! – ஹிண்ட்ராஃப்

கோலாலம்பூர், ஆக.18-

சமய நிந்தனைப் பேச்சாளர் ஜாகிர் நாய்க்கைத் தற்காக்க நம்பிக்கைக் கூட்டணி அரசுக்கு இந்தியர்கள் வாக்களிக்கவில்லை என்று ஹிண்ட்ராஃப் தலைவர் கார்த்திக் ஷான் தெரிவித்துள்ளார்.

உத்வேகத்தின் ஊற்றுக்கண் ஜாகிர் நாய்க் என்று பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் யூசோஃப் ராவா அண்மையில் தெரிவித்த கருத்து இந்திய சமுதாயத்தைச் சங்கடப்படுத்தி உள்ளது. அப்படியானால், பல இன சமுதாயமாக மலேசியர்களிடையே நிலவும் அமைதிக்கும் சகோதரத்துவத்திற்கும் இன்றைய அரசு உறுதி அளிக்கமுடியுமா என்று அவர் வினவியுள்ளார்.

இந்தியாவில் பிறந்த ஜாகிர் இந்த நாட்டில் தொடர்ந்து இருப்பாரேயானல் இங்குச் சமூக-சமய முறுகள் நிலையைத் தோற்றுவிப்பதுடன் மலேசிய கூட்டுச் சமுதாயத்தில் பிரிவினையையும் ஏற்படுத்தி விடுவார்.

பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ள இந்தச் சமய நிந்தனைப் பேச்சாளருக்கு, நாட்டின் தேர்தல் நடைமுறையில்கூடத் தலையிடும் அளவுக்குத் துளிர் விட்டுள்ளது. அதனால்தான், தேர்தலில், முஸ்லிம் வாக்காளர்கள் முஸ்லிம் வேட்பாளருக்குத்தான் அவர் ஊழல்வாதியாக இருந்தாலும் வாக்களிக்க வேண்டும் என்று ஸாகிர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

அமைதிப் பூங்காவாகத் திகழும் மலேசிய திருநாட்டில் இனங்களுக்கு இடையே பூசலையும் அரசியல் களத்தில் முறுகல் நிலையையும் தொடர்ந்து ஏற்படுத்தும் ஜாகிர் நாய்க்கைத் தற்காக்கவா கடந்த பொதுத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்தனர் என்று ஹிண்ட்ராஃப் தேசிய சட்ட ஆலோசகருமான கார்த்திக் ஷான் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கேட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன