செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > இந்தியாவுக்கான குறுகிய காலப் பயணத்திற்கு விசா தளர்வு வேண்டும்?
இந்தியா/ ஈழம்சமூகம்முதன்மைச் செய்திகள்

இந்தியாவுக்கான குறுகிய காலப் பயணத்திற்கு விசா தளர்வு வேண்டும்?

பினாங்கு ஆக 18-

அவசர நோக்கத்தின் பேரில் இந்திய நாட்டுக்கு குறுகிய காலப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் விசா கட்டணம் தளர்த்தப்பட வேண்டுமென்று, பினாங்கு தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்கத் தலைவர் நசீர் முகைதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருமணம், இறப்பு,மருத்துவச் சிகிச்சை போன்ற அவசர காரியங்கள் தொடர்பில் இரு வாரங்களுக்கு மேற் போகாமல் குறுகிய காலப் பயணமாக இந்தியா செல்லும் மலேசிய பயணிகளுக்கு விசா கட்டணத்தில் தளர்வு வழங்கப்பட வேண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் அண்மையில் தமது இந்தியப் பயணத்தின்போது, திருநெல்வேலி மாவட்ட மன்ற அரசியல் பிரமுகர்களுடனான் ஒரு சந்திப்புக் கூட்டத்தில் நசீர் இது குறித்துத் தமது கருத்தினை முன் வைத்துள்ளார்.  அவசர காலப் பயணத்திற்கு இந்தியாவுக்கான விசாக் கட்டணம் தளர்த்தப்படுமானால், அந்நாட்டுக்கு விஜயமளிக்கும்  பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது திண்ணமென்றும், இதனால் இந்தியாவுக்கே அதிக அனுகூலம் கிட்டுவது உறுதியென்றும் நசீர் இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளார் .

அரசியல் பிரமுகர்களுடன் நசீர் தோற்றமளிக்கும் படம்…

தவிரவும் இதன் பொருட்டு, இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நல்லுறவும் வர்த்தகப் பரிமாற்றமும் வலுப் பெறுவது நிச்சயமென்பதில் ஐயமில்லையென்று அறிவுறுத்தியிருக்கும் நசீர், இதனைக் கருத்திற் கொண்டு இந்திய அரசு இந்த விவகாரத்தில் விரைந்து உடன்பாடு காண்பது அவசியமென்றும் கருத்துரைத்துள்ளார்.

10 அல்லது 14 நாட்கள் என்ற அடிப்படையில் இரு வாரங்களுக்குள் அமைந்திருக்கும் பயணத்திற்கும், கூடுதல் காலப் பயணத்திற்கும் ஒரே அளவில் விதிக்கப்படும் விசா கட்டணம் பெரும்பாலோருக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதை இந்திய அரசு கவனத்திற் கொள்ள வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கும் நசீர்,  இந்த விவகாரத்தில் மாற்றம் காணப்படுவது பலரது பரவலான எதிப்பார்ப்பாக இருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

உறவினர்கள் அல்லது நண்பர்களின் இறப்பு தொடர்பிலும், இதே போன்று திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற மங்கள காரியங்களின் நோக்கத்திற்காகவும், அவசர மருத்துவச் சிகிச்சைக்காகவும் உடனடி குறுகியப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு, விசாக் கட்டணத்தில் தளர்வு அளிப்பதுமனிதாபிமான உயரிய குணத்தை வெளிப்படுத்துமென்றும் நசீர்  விவரித்துள்ளார்.

ஆதலால் இந்திய அரசு இந்த விவகாரத்தில் நல்லதொரு தீர்வு கண்டு, ஏராளமான பயணிகளின் மிகுந்த ஆவலாகவும், பெரும் எதிர்ப்பார்ப்பாகவும் நீடித்துக் கொண்டிருக்கும் பயண விசா கட்டணத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென்று, தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவட்ட அரசியல் பிரமுகர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் நசீர் முறையிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன