கோலாலம்பூர், டிச.7-

நீர் கட்டண விகிதத்தை உயர்த்தும் புத்ராஜெயாவின் பரிந்துரை குறித்து ஜொகூர் அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், அவ்விவகாரம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அம்மாநிலத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரான ஜிம்மி புவா வீ ட்சே தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கம் நீர் கட்டணத்தை உயர்த்துவதற்கான தகுந்த காரணத்தை அறிய ஜொகூர் விரும்புவதோடு, புதிய நீர் கட்டணத்தை எதிர்கொள்வதற்கான அம்மாநில மக்களின் ஆற்றலை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது.

நீர் கட்டணத்தை அதிகரிக்க விரும்பும் நீர், நில, இயற்கை வள அமைச்சர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமாரிடமிருந்து சிறிது கருத்துகளை பெற்றுள்ளோம். ஆயினும், அவ்விவகாரம் தொடர்பில், ஜொகூர் அரசாங்கம் எந்த தரப்பினருடனும்  இறுதிகட்ட கூட்டத்தை இன்னும் நடத்தவில்லை.

மேலும், நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில், மாநில அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சேவியர் ஜெயக்குமார் கூறியிருப்பதையும் ஜிம்மி புவா சுட்டிக்காட்டினார்.