ஆயெர் குரோ, டிச.7-

என்.எஃப்.சி நிறுவனம் தொடர்பில், வங்கிக் கணக்கை அம்பலப்படுத்தியதாக, வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 7 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த பி.கே.ஆரின் உதவித் தலைவர் ரபிசி ரம்லியை சிலாங்கூர், ஷா ஆலாம், உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 15ஆம் தேதி அக்குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்திருந்தது.

இந்நிலையில், ரபிசி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தேசிய சட்டத்துறை மேல்முறையீடு செய்திருப்பது குறித்து, பி.கே.ஆரின் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிருப்தி தெரிவித்தார்.

கால்நடை வளர்ப்பாளர்களின் பணத்தை அமலாக்கத் தரப்பினர், தவறாக பயன்படுத்தியுள்ளதை ரபிசி மக்கள் தெரிந்துக்கொள்வதற்கு உதவியுள்ளார். அதற்காக அவருக்கு நாம் நன்றியைத்தான் கூற வேண்டும். மாறாக, அவர் மீது குற்றம் சாட்டக்கூடாது எனவும் அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை மலாக்காவில் நடைபெற்ற பி.கே.ஆரின் மாநாட்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தோம்பல் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அன்வார் அவ்வாறு குறிப்பிட்டார்.

ஆயினும், ரபிசி மீதான மேல்முறையீடு திங்கள்கிழமை இரத்து செய்யப்படுமென தேசிய சட்டத்துறை தலைவர் தோமி தோமஸ் உறுதியளித்துள்ளார். அவர் கூறியபடி நடக்க வேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாவும் அன்வார் கூறினார்.

இதனிடையே, தன் மீது மேல்முறையீடு செய்யப்படுவது குறித்து கருத்துரைத்துள்ள ரபிசி ரம்லி, என்.எஃப்.சி தொடர்பான வழக்கில், தோமி தோமி தோமஸ் முன்னாள் அமைச்சரான டான்ஸ்ரீ ஷரிசாட் அப்துல் ஜாலிலின் குடும்பத்தினரையும் விசாரணைகு அழைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

அந்நிறுவனத்தின் ஷரிசாட்டின் கணவர் சாலே இஸ்மாயில் தலைமை செயல்முறை அதிகாரியாக உள்ள நிலையில், அதில் அவர்களது பிள்ளைகள் இயக்குநர்களாக உள்ளனர்.