ஷா ஆலாம், டிச.7-

அமானா கட்சியை இரண்டாவது தவணையாக வழிநடத்துவதற்கான பொறுப்பை ஏற்றுள்ளார் மாட் சாபு. 2022ஆம் ஆண்டு வரையில் அவர் அக்கட்சியின் தலைவர் பொறுப்பை வகிக்கவுள்ள நிலையில், அதன் துணைத்தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ சாலாஹுடின் ஆயுப் நிலைநிறுத்தப்பட்டுள்ளார்.

உதவித் தலைவர்களாக டத்தோ மாஃபுஸ் ஒமார், டத்தோஸ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசோப் ராவா, டத்தோ ஹாசானுடின் முஹம்மட் யூனூஸ் பொறுப்பு வகிக்கவுள்ளனர்.

முன்னதாக, அமானா கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில், தேர்வு செய்யப்பட்ட 27 செயற்குழு உறுப்பினர்களின் பெயர்களை அமானா கட்சியின் முன்னாள் சபாநாயகரான ஓன் ஜாஃபார் இன்று அறிவித்தார்.

நாடு தழுவிய நிலையில், அமானா கட்சியின் தேர்தலில் கலந்துக்கொண்ட 822 பேராளர்கள், மின்னியல் வாக்குப்பதிவின் வாயிலாக 2019/2022-ஆம் தவணைக்கான சபாநாயகர், துணைச் சபாநாயகர், தணிக்கையாளர்கள், 27 செயலவை உறுப்பினர்கள் முதலானோரைத் தேர்தெடுத்தனர்.

அமானா கட்சியின் சட்டத்தின் அடிப்படையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, சபாநாயகர் 27 செயலவை உறுப்பினர்கள், 14 மாநில தலைவர்கள் ஆகியோருடன் கூட்டத்தை நடத்த வேண்டும். அக்கூட்டத்தில்தான், 27 செயலவை உறுப்பினர்களிலிருந்து தலைவர், துணைத்தலைவர், 3க்கும் மேற்போகாத உதவித்தலைவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். அதன் அடிப்படையில், இன்று புதிய செயற்குழு தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

ஆயினும், கூடுதலாக இரண்டு உதவித்தலைவர்கள், பொதுச்செயலாளர் மற்றும் இதர பொறுப்புகளுக்குமான நபர்களை நியமிக்கும் அதிகாரத்தை அக்கட்சியின் தலைவரான மாட் சாபு கொண்டுள்ளார். 

இதனிடையே, நேற்றைய தேர்தலில் அமானாவின் தொடர்பு பிரிவு இயக்குநரான காலீட் சாமாட் 786 வாக்குகளில் முதலிடத்தை பிடித்திருந்த வேளையில், மாட் சாபு 681 வாக்குகளுடன் 7ஆம் இடத்தையே பிடித்திருந்தார்.