கோலாலம்பூர், டிச.7-

பாஸ் உடனான தேசிய ஒத்துழைப்பில், அம்னோவின் தலைமைத்துவம் புதிய தேசியவாதமாக பார்க்கப்படும் 3 கூறுகளை இணைக்க வேண்டுமென ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த அம்னோ பேராளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நில உரிமையாளர்கள் என்ற அடையாளத்தில், மனநிறைவைக் கொள்ளும் மலாய் மேலாதிக்க கருத்தை அம்னோ கைவிட வேண்டும். மாறாக, கற்றறிந்த சமூகமாகவும் வளர்ச்சியை விரும்பக்கூடிய சமுதாயமாகவும் தனித்து நிற்க மலாய்க்காரர்கள் முனைப்பு காட்ட வேண்டுமென அம்னோ கூலாய் தொகுதியின் துணைத்தலைவரான முஹம்மட் ஜஃப்னி ஷூக்கோர் அக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நில உரிமையாளர்கள் என்பதில் நாம் பெருமைக் கொள்வோம். ஆயினும், அது அளவுடனே இருக்க வேண்டும். மலாய்க்காரர்கள் அதிக செல்வ செழிப்புடனும் கற்றறிந்த சமுதாயமாகவும் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அப்படி இருந்தால், பொருளாதாரம், கல்வி மற்றும் சமூகத்தில் வெற்றிக்கண்ட நில உரிமையாளராக உருவாக முடியும் என இன்று புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்றுவரும் அம்னோ மாநாட்டில் மாநில பேராளர்களுக்கான விவாதத்தின் போது, முஹம்மட் ஜஃப்னி ஷூக்கோர் அதனைக் கூறினார்.

மேலும், இஸ்லாமைத் தற்காக்கும் போராட்டமானது, வெறும் மதம் மற்றும் இனம் ஆகியவற்றை மட்டுமே சார்ந்திருக்கவில்லை என்பதை மலாய்க்காரர்கள் நிரூபிக்க வேண்டும். நாட்டில் அமைதி மற்றும் வளம் நீடிக்க வேண்டுமென்றால், பொதுநலன்களுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அவ்வகையில், தேசிய ஒத்துழைப்பை பல்லின மக்களை உள்ளடக்கியதாக நாம் கொண்டு வர வேண்டும். மேலும், அம்னோ, பாஸ் இடையிலான ஒத்துழைப்பின் வாயிலாக, இஸ்லாம் முற்போக்கு மற்றும் மிதமான சமயமாக இருப்பதை நாம் வெளிப்படுத்த வேண்டும். அதோடு, புதிய மலாய் என்ற கொள்கைக்கு அடிதளமாக அது இருக்க வேண்டுமெனவும் முஹம்மட் ஜஃப்னி ஷூக்கோர் கேட்டுக்கொண்டுள்ளார்.