ஷா அலாம், டிச.7-

தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மட் ரெட்சுவான் முஹம்மட் யூசோப் கொண்டு வந்துள்ள பறக்கும் கார் திட்டம் உள்பட பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கத்தின் நிர்வாகத்தின் மீது அமானா கட்சியின் பேராளர் ஒருவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

பறக்கும் கார் திட்டம் அரசாங்கம் மேற்கொள்ளும் பயனற்ற திட்டம். அந்த திட்டத்தை தற்காப்பதற்கு அவமானமாக இருப்பதாக, பகாங் மாநில அமானா பேராளரான முஹம்மட் ஃபாட்சில் முஹம்மட் ரம்லி இன்று நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில், தலைவர் உரை மீதான விவாதத்தின் போது, அக்கருத்தை முன்வைத்துள்ளார்.

அரசாங்கம் அடுத்தாண்டு பெட்ரோல் உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. சந்தை விலையை அடையும் வரையில், வாரத்திற்கு பெட்ரோல் விலை 1 சென் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது மக்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. பொருட்களின் விலைகள் உயராமல் இருப்பதை உறுதி செய்ய அந்த அணுகுமுறை கொண்டு வரப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. என்ன கதை இது? மக்கள் கோபத்துடன் இருக்கும் நிலையில், அந்த திட்டத்தை அரசாங்கம் தள்ளி வைக்க வேண்டும்.

மேலும், மக்களின் பிரச்சனைகளைவிட பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கம் தேவையற்ற திட்டங்களை அமல்படுத்துவதில் அதிக ஆர்வத்தைக் காட்டுகின்றது. ஐசெர்ட் விவகாரம், கம்போங் பாரு மேம்பாட்டு திட்டம், தாய்மொழி பள்ளிகளில் ஜாவி எழுத்து, 18 வயதில் வாக்களிக்கும் உரிமை போன்ற திட்டங்கள் அதில் அடங்கும். அதன் காரணமாக, பக்காத்தான் அரசாங்கம் தேவையற்ற போரை (பிரச்சனைகளை) சந்திப்பதாகவும் முஹம்மட் ஃபாட்சில் சாடியுள்ளார்.