ஆயெர் கெரோ, டிச.7-

இன்று நடைபெற்ற பி.கே.ஆர். மாநாட்டில் தங்களுக்கு எதிராக சிலர் கருத்துகளை முன்வைத்ததால், பாதியிலேயே அங்கிருந்து வெளியேறியதாக அக்கட்சியின் துணைத்தலைவரான டத்தோஸ்ரீ அஸ்மின் அலியும் அவரது ஆதரவாளர்களும் தெரிவித்துள்ளனர்.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து, பி.கே.ஆரின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் அஸ்மின் அலி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதில், பி.கே.ஆர். மாநாட்டில், பேராளர்களின் விவாதத்தின் போது, கட்சியை வலுப்படுத்தும் கொள்கைகள் மற்றும் விவகாரங்களை மட்டுமே பேசப்படும் எனவும் அனைத்து தரப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்படும் எனவும் எந்த தரப்புகளையும் தாக்கி கருத்துகள் முன்வைக்கப்படாது எனவும் அதன் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வாரம் உறுதியளித்திருந்தார்.

ஆனால், அந்த வாக்குறுதியை அன்வார் நிறைவேற்றவில்லை என அஸ்மின் அலி குற்றம் சாட்டியுள்ளார்.

அன்வாரின் வாக்குறுதியை தாம் கடைப்பிடித்ததாக கூறியிருக்கும் அஸ்மின் அலி, அக்கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கான மாநாட்டில், தனது உரைகளில் கட்சி நலன் சார்ந்து மட்டுமே பேசியதை அனைவரும் அறியலாம் எனவும் கூறியுள்ளார்.

தலைவர் உரையில் அன்வார் பேசிய கதைகள், இதர பேச்சாளர்கள் தனிப்பட்ட முறையில் தன்னை தாக்கி பேசுவதற்கும் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் உறுப்பினர்களில் பிரிவினையை ஏற்படுத்த  வழிவகுத்தது. வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அன்வார் தோல்வி கண்டிருப்பதையே அது காட்டுகின்றது.

அதனால்தான், மாநாட்டிலிருந்து தாமும் தனது ஆதரவாளர்களும் வெளியேறியதாக அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அந்த சம்பவத்தைத் தொடர்ந்து கட்சியிலிருந்து வெளியேறுவீர்களா? என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்த போது, இது 20 ஆண்டுகளாக அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கிய கட்சி. அதிலிருந்து ஒரு போதும் தாம் விலகப் போவதில்லை. இதற்கு முன்பு பல பிரச்சனைகளைச் சந்தித்துள்ளோம். அதேப்போன்று, தற்போதைய பிரச்சனைக்கும் தீர்வு காண முடியுமென தாம் நம்புவதாகவும் அஸ்மின் அலி கூறியுள்ளார்.