அலோர் ஸ்டார், திசம்பர் 2:
பாஸ் கட்சியின் தலைமையில் மீண்டும் ஒரு இந்துக் கோவில் உடைப்பு நேர்ந்துள்ளது. நேற்று கோலா கெடா தாமான் பெர்சத்துவில் அமைந்துள்ள இராஜ முனீஸ்வரர் கோவிலை அலோர் ஸ்டார் நகர மன்றத்தால் உடைக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிலத்தில் அக்கோவில் கட்டப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கூறியுள்ளார்.
அக்கோவிலோடு கார் நிறுத்தும் இடமும் சீலாட் தற்காப்புக் கலை பயிற்சி செய்யும் இடமும் சேர்த்து உடைக்கப்பட்டன. அரசாங்கத்தின் புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் வர இருப்பதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
உள்ளூர் மக்களால் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தக் கோவில் தற்போது அந்த வட்டாரத்தில் சுமார் 100 இந்துக் குடும்பங்கள் வணங்கும் கோவிலாக உருவெடுத்துள்ளது.

இக்கோவில் உடைக்கப்படுவது குறித்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்றதும் கெடா மாநில முதல்வரின் இந்தியர் தொடர்பான விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி குமரேசனை அக்கோவில் நிர்வாகத்தினர் சந்தித்துள்ளனர்.
கெடா மாநில முதல்வரின் ஆணைப்படி மூன்று மாதங்களுக்கு அம்மாநில இசுலாம் அல்லாத சமய / வழிபாட்டுத் தளங்களை உடைக்காமல் ஒத்தி வைக்க வேண்டும் என்று அவரின் சிறப்புத் துணைச் செயலாளரிடம் இருந்து கடந்த 24-22-20200ஆம் நாள் கடிதம் கிட்டைக்கப்பெற்றது.

மாநில முதல்வரின் அலுவலகம் தடை ஆணையைப் பிறப்பித்திருந்தாலும் அதனை சற்றும் பொருட்படுத்தாத நகர மன்றத்தார் பிடிவாதமாய் கோவிலை உடைப்பதில் குறியாய் இருந்துள்ளனர்.
இவ்வாண்டு சனவரி மாதம் தொட்டே இங்குல்ள இந்து மக்களின் நம்பிக்கையையும் அவர்களின் வழிபாட்டுத் தளங்களையும் அவமதிக்கும் பொருட்டு அலோர் ஸ்டார் நகர மன்றத்தார் உட்பட சில பொறுப்பற்றத் தரப்பினர் இது போன்ற காரியங்களீல் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவில் நிர்வாகத்தினரிடம் முன்னறிவிப்புச் செய்யாமல் அதிகாலை 6.00 மணிக்குக் கோவிலை உடைக்கும் பணியில் அலோர் ஸ்டார் நகர மன்றத்தார் ஈடுப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து கோவில் நிர்வாகத்தார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது முன்னதாகவே அங்கு அலோர் ஸ்டார் நகர மன்றத்தாரும் காவல் துறையினரும் கோவிலை உடைக்கத் தயாராக இருந்தனர்.
இசுலாம் அல்லாத வழிபாட்டுத் தளத்தை உடைக்கத் தடை உத்தரவு கொண்ட மாநில முதல்வரின் கடிதத்தைக் காட்டியும் அவர்கள் பொருட்படுத்தாமல் கோவிலை உடைத்தனர்.
டத்தோ பண்டாருக்குத் தெரியாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காது என்பதில் ஐயமில்லை.
இதே போன்ற சம்பவம் தான் அலோர் ஸ்டார் ஜாலான் ஸ்டேசன் ஶ்ரீ மதுரை வீரன் கோவிலுக்கும் நேர்ந்தது.
இதற்கு முன்னர் வேறொரு நிலத்தில் அக்கோவிலை நிர்மானிக்க ஒரு மாத கால அவகாசம் மாநில முதல்வரால் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால்,சில நாட்களிலேயே திடீரென அதிகாலை 2.00 மணிக்கு அக்கோவில் உடைக்கப்பட்டது.
பாஸ் கட்சியின் கீழ் இயங்கும் கெடா மாநில அரசாங்கம் இசுலாம் அல்லாதோரின் விவகாரங்களை அலட்சியப்படுத்துகிறது என்பற்கான அடையாளங்களில் ஒன்றுதான் இந்த கோவில் உடைப்புச் சம்பவம்.
பாஸ் கட்சியின் கீழ் இருக்கும் மாநிலங்களில் நாளுக்கு நாள் இசுலாம் அல்லோதோரின் வழிபாட்டுத் தளங்கள் உடைக்கப்படுமா எனும் அச்சம் மேலோங்கிக் கொண்டே வருகிறது.
இதனால், மக்களிடையே அமைதி சீர்கெட்டு பல்லின மக்களிடையே ஒற்றுமை பாதிக்கும். பாஸ் கட்சியின் கைக்கு கெடா மாநில ஆட்சி மாறியது முதல் பல இசுலாம் அல்லாத, குறிப்பாக இந்துக் கோவில்களும் சீனக்கோவில்களும் உடைக்கப்பட்டுள்ளன.
இசுலாம் அல்லாதோரும் அவர்களின் பண்பாடும் கெடா மாநிலத்தில் அவமதிக்கப்படட்டு வருகிறது. இது தொடருமேயானால், எதிர்காலத்தில் இம்மாநிலத்தில் இசுலாம் அல்லாதோர் வழிபாட்டுத் தளங்கள் முற்றிலும் அழிக்கபடும் சூழல் ஏற்படலாம்.
பல மதவாதிகள் கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் நாடு முழுவதும் இசுலாம் அல்லாதோரின் வழிபாட்டுத் தளங்களை அழிக்க நடவடிக்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்விவகாரத்தில் மத்திய அரசும் ஒரு தலை பட்சமாகக் கண்டும் காணாததுமாக இருக்கின்றது என பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


