கிள்ளான் | ஜூன் 4 :-

நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) அமல்படுத்தப்பட்டது முதல் பிரச்சினையை எதிர்நோக்கி வரும் மோட்டார் சைக்கிளில் உணவு மற்றும்  பொருட்களை விநியோகிப்பவர்களின் நிலை குறித்து கிள்ளான் பெரிக்காத்தான் நேஷனலும் பொருட்களை மோட்டார் சைக்கிளில் விநியோகிப்போர்  (பெங்கந்தார்) சங்கமும் நேற்று கூட்டாக உடன்பாடு  கண்டன.

தேசிய கோவிட்- 19 தடுப்பூசி திட்டம் மற்றும் ஆகக் கடைசியாக அறிவிக்கப்பட்ட பெமெர்காசா+ திட்டத்தில் மோட்டார் சைக்கிளில் உணவு மற்றும்  பொருட்களை விநியோகிப்பவர்களுக்கு  (பி- ஹேய்லிங் ஓட்டுனர்கள்) சிறப்பு உதவி  குறித்து  நாடு முழுமையும் உள்ள 70,000 பி- ஹேய்லிங்  ஓட்டுனர்களைப் பிரதிநிதிக்கும் பெங்காந்தார் மத்திய அரசாங்கத்திடம் பல முறை கோரிக்கைகளை முன் வைத்தது என்று கிள்ளான் பெரிக்காத்தான் நேஷனல் சமூக சேவை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லன் தனபாலன் தெரிவித்தார்.

இதன் பொருட்டு, கிள்ளான் பெரிக்காத்தான் நேஷனல் இவ்விரு விவகாரங்களையும் போக்குவரத்து அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட இலாகாக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவிருக்கிறது. அரசாங்கத்தின் உதவியைப் பெறுவதினின்று எவரும் தவறாமல் இருப்பதை இது உறுதிப்படுத்தும் என்று நல்லன் குறிப்பிட்டார்.

பி-ஹேய்லிங் ஓட்டுனர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி விரைவில் செலுத்தப்பட வேண்டும் என்பதோடு பெமெர்காசா+ திட்டத்தில் கிரேப் ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்றே பி-ஹேய்லிங் ஓட்டுனர்களுக்கும் “ஒரு முறை வழங்கப்படும் தொகையாக” 500 வெள்ளி சிறப்பு நிதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கிள்ளான் பெரிக்காத்தான் நேஷனல், பெங்கந்தார் ஆகியவை பரிந்துரை செய்தன.

பிரதமர் தான் ஸ்ரீ முகிதீன் யாசின் தலைமையிலான மத்திய அரசாங்கம் மக்களின் சிரமங்கள் மீது அக்கறை கொள்வதோடு நீண்ட நாட்களாக நீடித்து வரும் பி-ஹேய்லிங் ஓட்டுனர்கள் பிரச்சினை மீதும்  கவனம் செலுத்தும் என்று தாங்கள் நம்புவதாக மலேசிய பி-ஹேய்லிங் ஓட்டுனர்கள் சங்கத்தின் உச்சமன்ற உறுப்பினரான முகமது ஹெட்ரின் ரம்லி கூறினார்.