கோலாலம்பூர் | ஜூன் 19 :-

சில வேளைகளில் பல கேள்விகள் எழுகின்றன. பதில்தான் கிடைப்பதில்லை.

தமிழ்நாட்டு தொழிலாளர் திரு. வேலாயுதம் சிக்கலைக் களைய மலேசிய அமைச்சர் முற்பட்டது சிக்கலா? அல்ல அதனை டத்தோ சரவணன் செய்ததுதான் சிக்கலா?

குற்றச்சாட்டுக்குப் நடவடிக்கை எடுக்க முற்பட்டது குற்றமா? அல்லது வெகு விரைவில் நடவடிக்கை எடுக்க முற்பட்டது குற்றமா?

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் கேள்வி கேட்பது மட்டுமே எப்படி தீர்வாகாதோ அதே போன்றுதான் எல்லாவற்றுக்கும் பதில் தேடுவதும் தீர்வினைக் கொடுக்காது.

நமக்குத் தொடர்புள்ள ஓர் வெளிநாட்டு ஊடகத்தில் (புகழ்பெற்ற தமிழ்நாட்டு ஊடகம்) நம் நாட்டின்மீதும் குறிப்பாக மலேசியத் தமிழர்கள்மீதும் ஒரு பெரிய குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. முதலாளி-தொழிலாளி சிக்கல் என்றாகாமல் வேறு பல குற்றச்சாட்டும் எழுகிறது. பொழுதுபோக்கு, ஊடகம் போன்றவற்றில் மற்ற நாடுகளைப் போல் தமிழ்நாட்டை நாம் பிரித்துப் பார்ப்பதில்லை. அதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே.

இந்தக் குற்றச்சாட்டினைப்பற்றி தமிழ்லென்சு(Tamil Lens) என்ற மலேசிய மின்னியல் ஊடகம் முதன் முதலாக எழுத்துப்பூர்வமான செய்தியை வெளியிடுகிறது. அதே நேரத்தில், அவ்வூடகம் இது தொடர்பாக தொடர்புள்ள அதிகாரிகளிடமும் அமைச்சிடமும் கொண்டு செல்வதாகக் கூறி அடிக்கடி இந்தச் செய்தி தொடர்பான முன்னேற்றங்களைப் புதுபித்துக் கொண்டே வந்தது.

தமிழ்லென்சு போல, அநேகன் (Anegun) என்ற மின்னியல் செய்தி ஊடகமும் இக்குற்றச்சாட்டுத் தொடர்பான காணொளிகளை வெளியிடுகிறது.

இவ்வூடகங்கள் அதிகாரிகளையும் அமைச்சினையும் தவிர்த்து இச்சிக்கலுக்குத் தொடர்பான மற்ற இயக்கங்களையும் தொடர்பு கொண்டதனை அவர்களுடைய பக்கத்தில் காணலாம். அடிக்கடி முன்னேற்றங்களைப் புதுபித்து வந்ததாலும் அமைச்சரே தலையிடுவதாலும் மக்கள் மத்தியிலும் அதிகாரிகள் மத்தியிலும் இச்செய்தி மிக வேகமாக பரவுகிறது.

இதற்குத் தொடர்புள்ள அமைச்சில் அமைச்சராக இருக்கும் டத்தோ சரவணன் உடனடியாக ஊடகங்களிடம் பதிலளிக்கிறார். மலேசிய அதிகாரிகள் திரு. வேலாயுதத்தின் முதாலாளி/ தொடர்புள்ள நிர்வாகத்திடமும் விசாரணை செய்கிறார்கள். சட்டப்பூர்வ நடக்க வேண்டியதெல்லாம் முறையாக நடக்கிறது.

பின்னர், குற்றஞ்சாட்டிய அந்தத் தமிழ்நாட்டு நிகழ்ச்சி நடத்துனரிடமும் பாதிக்கப்பட்டவரிடமும் இயங்கலையில் நடந்ததைக் கேட்டுவிட்டு பின்னர் என்னவெல்லாம் செய்யலாம் / செய்யவேண்டும் என்பதனைக் கூறி அதற்கான சிக்கல்தீர்வு நடவடிக்கைக் குறிப்பிட்டு (இரு நாட்டிற்கும்) விளக்கமளிக்கிறார், டத்தோ சரவணன். ஓர் ஊடக நிகழ்ச்சிக்காக உள்ளக்குமுறலாக ஒலித்தவொன்று சட்டம், தீர்வு என்று அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறது. ஊடகங்கள் முயற்சியெடுத்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததால் அமைச்சருக்கு இதன் அழுத்தம் புரிந்தது. அமைச்சர் தலையிட்டதால் இச்செய்தி அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தது.

இதுதான் இதுவரை நடந்துள்ளவை. விரைவில் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மையும் என்னென்ன முறைக்கேடு நடந்திருக்கிறது, யார்மீது தவறு என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதை அரசியலாகப் பார்ப்போர், தாராளமாக அரசியலாகவே பாருங்கள். டத்தோ சரவணன் அரசியல்வாதிதான். ஆனால், இந்தச் சிக்கலில் டத்தோ சரவணனின் பங்கினைப் போல் ஊடகத்தின் பங்கு பெருமடங்காக இருப்பதனையே பார்க்க முடிகிறது.

ஊடகங்கள் முறையாக இச்சிக்கலை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த காரணத்தாலும் அதனைத் தொடர்புள்ள அமைச்சிடம் கொண்டு சென்றதாலும் இச்சிக்கல் உடனே களையப்படுவதற்கான அடுத்தக்கட்டத்திற்கு வந்தது.

இல்லையேல் “நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுவான்,மேடம்” என்று அந்த நிகழ்ச்சித் துண்டைப் பார்த்து சிரித்துவிட்டு கடந்ததைப் போல இதனையும் பார்த்து பொங்கிவிட்டு கடந்திருப்போம்.

இங்கு உளப்பூர்வமான வாழ்த்தும் பாராட்டும் மேற்சொன்ன ஊடகங்களுக்குத்தான். டத்தோ சரவணன் முனைப்பாகச் செயல்பட்டதும் இச்சிக்கலை அவர் கையாண்டவிதமும் சிறப்பு. அவர் செய்ததில் அரசியல் காரணங்கள் இருப்பதாகத் தோன்றுவதாகக் கூறுபவர்களுக்கு….அரசியல் காரணமோ இல்லையோ அது நல்ல விளைவைத்தான் தந்தது. புகழ்ச்சி விரும்பாத, தான் செய்யும் நல்லதை வெளிச்சத்திற்குக் கொண்டுவராத அரசியல்வாதி உலகில் உண்டெனில், டத்தோ சரவணன் செய்தது தவறுதான். தனிப்பட்ட முறையில் அவர் அரசியல் காரணங்களுக்காக இதைச் செய்ததாகத் தோன்றவில்லை.

பி/கு: நம் அரசியல் பார்வையில் வேறுபட்ட / எதிர்மாறான ஒருவர் நல்லது செய்தால் பாராட்டுவது எந்தவிதத்தில் தவறென்று தெரியவில்லை. அது தவறென்றால் நான் எழுதியது பெரிய தவறென்று நினைத்து பொறுத்தருளி கடந்து விடுங்கள்.

-ஜெயமோகன் பாலசந்திரன்-