Home மலேசியா கல்வி eZ LEARNING’ இலவச இயங்கலை வகுப்புகள் : தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் இன்னொரு அத்தியாயம்...

eZ LEARNING’ இலவச இயங்கலை வகுப்புகள் : தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் இன்னொரு அத்தியாயம் !

1223

கோலாலம்பூர் | 17/9/2021 :-

கோவிட் பெருந்தொற்றுப் பரவலால் நிலைக்குத்தியிருக்கும் நம் மாணவர்களின் இயல்பான கற்றல் கற்பித்தல் முறை குறித்து நாம் அறிந்திருக்கிறோம். பள்ளிகளில் வரையறுக்கப்பட்ட அட்டவணைபடி பாடங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், அவை பெரும்பாலும் பள்ளி நேரத்தில் அதாவது காலை 7.00க்குத் தொடங்கி பிற்பகல் 1.00குள் முடிவடைகின்றன.

பெருந்தொற்றின் பொருளாதார அழுத்தங்களாலும் நடமாட்டக் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கையாலும் மாணவர்கள் மாலைநேர பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்ல முடியாத நிலையில் கல்வித் துணையமைச்சர் அவர்களின் கனவுத் திட்டமான ‘eZ LEARNING’ எனும் இலவச இயங்கலை வகுப்புத் திட்டம், பிரதமரின் மலேசியக் குடும்பம் கொள்கையின் அடிப்படையில் தற்சமயம் தமிழ்ப்பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டிருக்கின்றது.

நம் தமிழ்ப்பள்ளிகளைப் பொருத்தவரை அங்கீகாரங்களை எதிர்பார்க்காமல் இலைமறை காயாகத் தங்கள் திறமைகளைக் குறுகிய வட்டத்துக்குள் வளைத்துக் கொண்டிருக்கும் பல ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். மாணவர்களின் அறிவுப் பயிருக்கு நீர் வார்க்க அத்தகைய திறமையான ஆசிரியர்களை அடையாளம் கண்டு ஒருங்கிணைப்பது இத்திட்டத்தின் மற்றுமொரு  உன்னத நோக்கமாகும்.

நாடு தழுவிய நிலையில் பாட வாரியாக மிகச்சிறந்த ஆசிரியர் படையொன்றை உருவாக்கி, அவர்களின் பாடப்போதனைத் தரவுகள் கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவினரால் முறையாகச் சரிபார்க்கப்பட்டு பின்னர் இந்த இயங்கலை வகுப்புகள் சிறப்பாக நடைபெற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மிகச்சிறந்த ஆசிரியர்களால் வழிகாட்டப்படுவதும்  சிறந்த ஆசிரியர்கள் கல்வியமைச்சு நிலையில் அடையாளம் காணப்படுவதும் இத்திட்டத்தின் ஆக்கப்பூர்வமான விளைப்பயன்களாகும். அறிவியல் பாடத்திலிருந்து தொடங்கும் இத்திட்டம் படிப்படியாக மற்ற பாடங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். இத்திட்டத்தில் தன்னார்வ முறையில் இணைந்திருக்கும் ஆசிரியர்களுக்குக் கல்வி அமைச்சின் நியமனக் கடிதங்கள் முறையாக அனுப்பி வைக்கப்படும்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு இதுபோன்ற நகர்வுகள் அரும்பெரும் பங்காற்றும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கல்வித் துணையமைச்சர் அலுவலகத்தின் வாயிலாக, உடல் பொருள் ஆவியைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அர்ப்பணித்திருக்கும் ஆசிரியர்கள், இது போன்ற திட்டங்களால் உரிய வெளிச்சம் பெறுவார்கள். முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல் தமிழ்ப்பள்ளிகளின் நலன்மீது சீரிய அக்கறைக் கொண்டிருக்கும் கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் அவர்களின் தலைமையில் இது போன்ற முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வத் திறப்பும் முதல் வகுப்பும்  எதிர்வரும் 20 செப்டம்பர் 2021 திங்கட்கிழமையன்று இயங்கலை முறையில் நடைபெறும்.