Homeவர்த்தகம்இந்தோனேசியாவில் இருக்கும் மலேசியத் தூதரகம் செயல்பட வேண்டும் ! – இந்திராணி செல்வக்குமார்

இந்தோனேசியாவில் இருக்கும் மலேசியத் தூதரகம் செயல்பட வேண்டும் ! – இந்திராணி செல்வக்குமார்

பூச்சோங் | 17/12/2021 :-

வெளிநாடுகளில் இருக்கும்  மலேசியத் தூதரகம் மலேசியர்ளுக்காகச் செயல்பட வேண்டும் அரசு சாரா இயக்கத்தைச் சேர்ந்த இந்திராணி செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தோனேசியாவில் ஆதரவற்ற நிலையில் இருந்த மலேசியக் குடும்பத்தைக் காப்பாற்றி மீட்டு மலேசியாவுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்ட இந்திராணி செல்வக்குமார், அங்கிருந்த மலேசியத் தூதரகம் எந்தவித உதவியையும் செய்யாதது வருத்தமளிப்பதாக அநேகனிடம் பகிர்ந்து கொண்டார்.

கடந்த அக்தோபர் மாதம் முதல் வாரத்தில் சுங்கை சிப்புடைச் சேர்ந்த கல்சோம் என்கிற மலாய்ப் பெண்மணி தமது அமைப்பைத் தொடர்பு கொண்டதாகவும் அவரது தங்கை இந்தோனேசியாவில் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் கூற அவரை மீண்டும் மலேசியாவுக்கு அழைத்து வரச் செய்ய உதவியை நாடியதாக Pertubuhan Peneraju Insan Sg.Siput அமைப்பின் செயலாளர் இந்திராணி தெரிவித்தார்.

 ஓர் இந்தோனேசிய ஆடவரை 2011ஆம் ஆண்டு திருமணம் செய்திருக்கிறார் ரோஹாயா. மலேசியாவில் இருக்கும்போது அவருக்கு இரு குழந்தைகள் பிறந்தன. கடந்த 2019ஆம் ஆண்டு இந்தோனேசியாஇல் இருக்கும் தமது கணவரின் குடும்பத்தாரைக் காணச் சென்றிருக்கிறார். கோவிட்-19 பெருந்தொற்றால் அனைத்துலக நிலையில் முடக்கம் காணவே அவர் அங்கெயே தங்கிவிட்டார்.

2021 ஆம் ஆண்டு பிப்பரவரி மாதம் அவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. எதிர்பாராத விதமாக ஜூலை மாதத்தில் ரோஹாயாவின் கணவர் இறந்து விட்டார். குடும்பத் தகராறில் ரோஹாயாவின் கணவரிடையக் குடும்பத்தார் அவருக்குப் பிறந்த குழந்தையை அபகரிக்க முயன்றதாகவும் அங்கிருந்து அவர் தப்பி வேறு இடத்தில் ஒளிந்து வாழ்ந்துள்ளார்.

ரோஹாயா தனது உண்மை நிலையை மலேசியாவில் இருக்கும் தமது அக்கா கல்சோமைத் தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கிறார். பலரது உதவியை நாடியும் கால்சோமிக்கு யாரும் உதவ முன்வரவில்லை. ரோஹாயாவைக் காப்பாற்றி மீண்டும் மலேசியா கொண்டு வர இந்திராணியை கல்சோம் நாடி இருக்கிறார்.

படிப்பறிவு இல்லாத அக்குடும்பத்தார் நிலையைக் கண்டு இந்திராணி மனிதாபிமான அடிப்படையில் உதவ முன் வந்துள்ளார். ஆனால் அவர் பல சிக்கல்களைச் சந்தித்திருக்கிறார்.

ரோஹாயாவுடன் இந்தோனேசிய சுங்கத் துறை அதிகாரிகள் (இந்தோனேசியாவில்)

இந்தோனேசிய ஆடவரை மலேசியாவில் திருமணம் நோஹாயாவுக்கு 2021 பிப்பரவரி மாதம் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் பிறப்பை இந்தோனேசியாவில் பதிவு செய்யப்பட்டு இந்தோனேசியக் குடியுரிமை வழங்கப்பட்டு விட்டது. இதனால், நோஹாயாவையும் அவரது குழந்தையையும் மலேசியாவுக்குக் கொண்டு வருவதில் சில சட்ட சிக்கல் ஏற்பட்டது.

ரோஹாயாவுக்கு மலேசியத் தூதரகத்தை நாட ஆலோசனை வழங்கினார் இந்திராணி.

மேலும் ரோஹாயாவின் திருமணம் இந்தோனேசியாவில் பதிவு செய்யப்படாததால், கடப்பிதழ் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

மலேசியத் தூதரகத்தை நேரடியாகவே தொடர்பு கொண்டிருக்கிறார் இந்திராணி. ஆனால், இந்திராணியின் முன்னெடுப்பு அலட்சியப் படுத்தப்பட்டிருந்தது. ரோஹாயாவுக்குத் தற்காலிக உறைவிடமோ அல்லது அவரது குழந்தைகளுக்கு அவசர உதவியோ மலேசியத் தூதரகத்தால் வழங்கப்பட வில்லை. இது ஒரு வருத்தத்தக்க நிலை என இந்திராணி குறிப்பிட்டார்.

இதனால் கால தாமதம் ஆகவே, ஆதரவற்ற நிலையில் இருக்கும் ரோஹாயாவுக்கு மன அழுத்தத்தால் தற்கொலை எண்ணம் மேலோங்கியது.

நிலைமை மலேசியத் தூதரக அதிகாரிக்கு எடுத்துரைத்து ஆவணப் பணிகள் துரிதப்படுத்த முயற்சியை செய்தார் இந்திராணி.

அந்தக் காலக் கட்டத்தில் ரோஹாயாவுக்கு (10 நாட்கள்) அடைக்கலம் அளித்தார் இந்தோனேசிய சுங்கத் துறை அதிகாரி ரிட்ஸுவன்.

ஒரு வழியாக MyTravelPass உட்பட அனைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்டதோடு அதற்கான செலவை இந்திராணியே ஏற்றுக் கொண்டார். மலேசியாவில் இருந்து இந்தோனேசியாவுக்குப் பணத்தை அனுப்பி விமானப் பயணச் சீட்டு உட்பட அனைத்தும் பெறப்பட்டன.

மலேசியத் தூதரகத்திடம் இருந்து எந்தவித உதவியும் கிடைக்காதது மன வேதனை அளிக்கிறது என இந்திராணி சுட்டிக் காட்டினார்.

கடைசியாக, ரோஹாயா கணவர் இறந்து விட்டார் என்பதையும் அவரது குடும்பம் வறிய நிலையில் உள்ளக் குடும்பம் எனவும் குறிப்பிட்டு அரசாங்கக் கடிதம் பெற மலேசியத் தூதரகத்திடம் விண்ணப்பித்துப் பெறப்பட்டது.

இறைவன் அருளால், இம்மாதம் 9 ஆம் நாள் ரோஹாயா தமது பிள்ளைகளுடன் கோலாலம்பூர் வந்தடைந்தார். தனிமைப்படுத்தலுக்கு ரிம 4,700 கட்டணம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இந்தக் குடும்பம் வறிய நிலையில் இருப்பதை நிரூபித்து அவருக்கு விதிக்கப்பட்டக் கட்டணத்தை Bahagian Hasil பிரிவு அதிகாரி இனா இலவமாக்கிக் கொடுத்தார்.

இருப்பினும்,  9 மாதக் குழந்தைக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ள ரிம 250 செலுத்தியே ஆக வேண்டும் எனக் கட்டாயப் படுத்தப்பட்டது.

அந்த செலவையும் தாம் ஏற்றுக் கொண்டதாக இந்திராணி குறிப்பிட்டார்.

தற்போது ரோஹாயா நீலாயில் உள்ளத் தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ளார்.

இதன் பின்னர், ரோஹாயா குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் வாழ அரசாங்கத்திடம் இருந்து என்ன உதவி கிடைக்கப்பட வேண்டுமே, அதனை தமது அரசு சாரா இயக்கமான Pertubuhan Peneraju Insan Sg.Siput அமைப்பின் வழி செய்து தர திட்டமிட்டிருப்பதாக இந்திராணி குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு மாதமாக ரோஹாயா குடும்பத்தை மீட்டு மலேசியா கொண்டு வரத் தாம் எடுத்துக் கொண்ட சிரத்தையும் ரிம 2,000க்கும் மேல் செலவாலி இருப்பதையும் இந்திராணி பகிர்ந்து கொண்டார்.

வெளிநாட்டில் இருக்கும் மலேசியத் தூதரகம் என்பது மலேசிய மக்களுக்காகச் செயல்பட வேண்டும். எதிர்ப்பாராத சூழ்நிலையில்; ஆபத்தில் சிக்கியிருக்கும் மலேசியர்களுக்கு அங்கிருக்கும் தூதரகம் உதவ முடியாத நிலை மிகவும் கவலைக்கிடமான ஒன்றாகும்.

மானிய ஒதுக்கீடு இல்லை; உறைவிடம் இல்லை; உடனடியாக உதவும் நிலையில் மலேசியத் தூதரகம் இல்லாத நிலை இந்தோனேசியாவில் மட்டுமா ?

அல்லது அந்தத் தூதரகத்தில் இருக்கும் அதிகாரிகளின் செயலாக்கத் தன்மை இல்லாததாலா ?

அல்லது மற்ற நாடுகளில் இருக்கும் மலேசியத் தூதரகங்களும் இதே மாதிரியான முடங்கிய நிலையா ?

என இந்திராணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், படித்த தனக்கே ஆவணங்கள் ஏற்பாட்டிற்கும் இதர நடைமுறைக்கும் சிரமப்பட்டதாகக் கூறும் இந்திராணி, ரோஹாயா போல் எழுதப் படிக்கத் தெரியாதோர் எவ்வளவு இன்னல்களைச் சந்திக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், 19/12/2021 ஆம் நாள் தனிமைப்படுத்தல் காலக்கெடு முடிந்து ரோஹாயா விடுவிக்கப்பட இருப்பதாகவும் அவரது குடும்பத்தாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு மேலாகப் பிரிந்திருந்த நோஹாயாவையும் கல்சோமையும் சந்திக்க வைக்கப்போவதாகவும் இந்திராணி குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more