நம்பிக்கை கூட்டணியின் தலைமைத்துவத்தால் அம்னோ கலக்கம்! -லிம் கிட் சியாங்

0
6

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 17
பக்காத்தான் ஹராப்பான் தனது மேல்மட்டத் தலைவர்களின் பட்டியலை அறிவித்தத்தைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பல்வேறு விதமான அறிக்கைகளை வெளியிட்டு வருவது அம்னோவும் தேசிய முன்னணியும் கலக்கம் அடைந்துள்ளதைப் புலப்படுத்துவதாகக் ஜ.செ.கவின் ஆலோசகர் லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

பக்காத்தான் கூட்டணியின் கொள்கை அறிக்கை, சின்னம், தலைமைத்துவ அமைப்புமுறை யாவும் அம்னோவுக்கு அச்சத்தை உருவாக்கியிருப்பதோடு ஆளும் கட்சிக்கு பெரும் தாக்கத்தை உருவாக்கியிருப்பதாக அவர் கூறினார்.

அண்மையில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் ஒன்று சேர்ந்திருப்பதைப் பொறுக்க முடியாத பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி, தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ சாலே சைட் கெருவாக், புறநகர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் முதலானோர் பல்வேறு அறிக்கைகளை விட்டுள்ளனர்.

அம்னோ தன்னைத் தற்காத்துக் கொள்ள பல்வேறு ஆயத்த நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதால் 14ஆவது பொதுத் தேர்தல் இவ்வாண்டு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் கிட் சியாங் குறிப்பிட்டார்.