Homeமலேசியாகுண்டர் கும்பலில் சேர சொல்லி மாணவரை தாக்கிய இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

குண்டர் கும்பலில் சேர சொல்லி மாணவரை தாக்கிய இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

ஜொகூர்பாரு, ஜூலை 17–

     தங்களின் “கேங் 550’’ எனும் குண்டர் கும்பலில் சேர மறுத்த மூன்றாம் படிவ மாணவனைத் தாக்கிய 5 இளைஞர்களை போலீஸ் தேடி வருகின்றது. அவர்கள் நேற்று ஜாலான் இம்பியான் எமாஸ் 9 எனும் பகுதியில் அந்த மாணவனைத் தாக்கியதாக கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மாணவர் பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த அந்த 5 இளைஞர்கள் அவரை அருகாமையிலுள்ள ஒரு லோரோங்கிற்கு தரதரவென இழுத்து சென்று மிரட்டியதோடு தாக்கியதாக தெரிய வருகிறது.

இது குறித்து ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் முஹம்மட் கூறுகையில், பிற்பகல் மணி 1.05 அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தாமான் இம்பியான் ­எமாஸிலுள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றில் பயின்றுவரும் 16 வயது மாணவனை அதேப்பள்ளியில் பயின்ற 5 முன்னாள் மாணவர்கள் கடுமையாக தாக்கியதால் அம்மாணவருக்கு  உதடு, நெற்றி, இடது கன்னம் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டதாக கூறினார்.

தற்போது அந்த 5 இளைஞர்களை அடையாளம் கண்டு வருகிறோம். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் போலீசுக்கு உடனடியாக தகவல் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இச்சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றது. பள்ளிகளில் குண்டர் கும்பல் விவகாரங்கள் நுழைவதற்கு போலீஸ் இடமளிக்காது.

எங்களது விசாரணையில் அந்த 5 முன்னாள் மாணவர்கள் அண்மையில்தான் அப்பள்ளியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களின் கும்பலில் வேறு புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனரா? என்பதையும் விசாரித்து வருகிறோம் என டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் இன்று வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவர் ஜொகூர்பாரு உத்தாரா போலீஸ் தலைமையகத்தில் புகார் அளித்த பிறகு சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். போலீஸ் இச்சம்பவத்தை குற்றவியல் சட்டவிதியான செக்‌ஷன் 147-இன் கீழ் விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.

spot_img

latest articles

explore more