கிள்ளான், அக். 24-
தீபத் திருநாளின் குதூகலத்தில் வசதி குறைந்த சிறார்கள் விடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்தும்
வகையில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் தனது தொகுதியில் உள்ள சிறார்களை விற்பனை மையங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்குப் பிடித்தமான புத்தாடைகளை வாங்கிக் கொடுத்து மகிழ்வித்தார்.
இவர்களை விற்பனை மையங்களுக்கு அழைத்துச் சென்று இவர்களுக்குப் பொருத்தமான ஆடைகளை வாங்கித் தருவதற்கு ஏற்பாட்டாளர்கள் முன்று நாட்கள் செலவழித்ததாகக் கூறப்படுகிறது.
இத்திருநாளில் மற்றவர்களோடு இணைந்து தாங்களும் புத்தாடைகள் அணிந்து மத்தாப்பு, பட்டாசு கொளுத்தி மகிழ வேண்டும் என்ற சிறார்களின் அவாவை இதன் வழி ஏற்பாட்டாளர்கள் நிறைவு செய்தனர்.
அனைவரிடத்திலும் அன்பு மற்றும் பரிவை மேலோங்கச் செய்யும் இந்நடவடிக்கையின் கீழ் சம்பந்தப்பட்ட சிறார்களின் முகங்களில் சந்தோஷத்தைக் காண முடிந்ததாக குணராஜ் குறிப்பிட்டார்.
அதோடு, முதன் முறையாக தங்களின் புத்தாடைகளைத் தாங்களே தேர்வு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது இச்சிறார்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் சொன்னார்.
இப்பணி வெற்றி பெறுவதற்குத் துணை புரிந்த நன்கொடையாளர்கள், ஜிஎஸ்ஐ நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ரோபர்ட் பாஸ்கர், நிகழ்ச்சியின் இயக்குனர் ஷெர்லி மற்றும் குழுவினர் ஆகியோருக்கு குணராஜ் நன்றி தெரிவித்தார்.


