கோலாலம்பூர், பிப்.16-
உள்நாட்டு வருமான வரி இலாகா கடந்தாண்டு 183.3 பில்லியன் வெள்ளி வரியை வசூல் செய்திருப்பதாக வாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ டாக்டர் அபு தாரிக் ஜமாலுடின் தெரிவித்தார்.
இத்தகவலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்திருப்பது குறித்து பேசிய அபு தாரிக் முந்தைய ஆண்டில் வசூல் செய்யப்பட்ட தொகையைக் காட்டிலும் இது 7.8 பில்லியன் வெள்ளி அதிகமாகும் என்றார்.
“இந்த 4.49 விழுக்காடு அதிகரிப்பின் வழி நாட்டில் நேரடி வரி வசூலிப்பில் அதிகமான தொகை வசூல் செய்து வரலாறு படைத்துள்ளது வாரியம்” என்று இங்குள்ள பிரபல தங்கும் விடுதி ஒன்றில் வருமான வரி இலாகா ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு மற்றும் விருந்து நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தங்கள் சொந்தப் பெயரிலோ அல்லது உள்நாட்டினரின் பெயரிலோ வர்த்தகம் புரிந்து வரும் வெளிநாட்டினர் கட்டாயம் வருமான வரி செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இவ்வாறு செய்யத் தவறுவோருக்கு எதிராக உரிய அபராதம் விதிக்கப்படும் என்றும் அபு தாரிக் எச்சரிக்கை விடுத்தார்.
“இவர்கள் இந்நாட்டில் அனைத்து அடிப்படை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு வசதிகளையும் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் வருமான வரியை அவசியம் செலுத்த வேண்டும் ” என்றார்.
அதே வேளையில், ஏசிபி பிரிவு 44 (6) கீழ் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்களுக்கு வரி விலக்களிப்பு வழங்குவது மீதும் இலாகா கவனம் செலுத்தும் என்றும் அவர் சொன்னார்.
இவ்விவகாரத்தில் காலாவதியான மற்றும் விலக்களிப்பு அங்கீகாரம் பெறாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
வசூலிக்கப்பட்ட தொகையை சொந்த பயனீட்டிற்குப் பயன்படுத்துவதன் வழி நிதி துஷ்பிரயோகம் செய்யும் அமைப்புகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அண்மைய சீனப்புத்தாண்டையொட்டி இந்நிகழ்ச்சியில் சிங்க நடனம் படைக்கப்பட்டது. விருந்தினர்கள் அனைவரும் சேர்ந்து பாரம்பரிய சீன உணவு கலவையான ‘யீ சாங்கில்’ பங்கேற்றது பல்லின மக்களின் ஒற்றுமையைப் பிரதிபலித்தது.




