கிரிஷ் இசை நிகழ்ச்சி மலேசிய ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும்! -டத்தோஸ்ரீ சரவணன் நம்பிக்கை

96

கோலாலம்பூர், ஏப்.19-

வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் பின்னணி பாடகர் கிரிஷின் இசை நிகழ்ச்சி மலேசிய ரசிகர்களுக்கு ஒரு மனநிறைவைத் தரும் நிகழ்ச்சியாக அமைந்திருக்கும் என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியைக் காணத் தவறுபவர்கள் வருந்தும் அளவுக்கு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்திருக்கும் என்று இங்கு இந்நிகழ்ச்சி தொடர்பான டிக்கெட்டை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்து உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

“இங்குள்ளவர்கள் இசை நிகழ்ச்சிகளை நன்றாக ரசிக்கக்கூடியவர்கள். ஆனால், டிக்கெட்டுகளை கடைசி நேரத்தில்தான் வாங்குவார்கள். ஆகையால், ரசிகர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட்டுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” என்றார் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன்.

ஹரிகிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ், ஏகே புரோடக்‌ஷன் இணை ஏற்பாட்டில் வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி தலைநகர், மேகா ஸ்டார் அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

இதனிடையே, கிரிஷ் இசை நிகழ்ச்சி தொடர்பில் இங்குள்ள ரோயல் சிலாங்கூர் கிளப்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பாடகர் கிரிஸ், ஹரிகிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஏகே புரோடக்‌ஷன் உரிமையாளர் ஹரிகிருஷ்ணா, டி..பி.கானா, விஷால் ஆகியோர் கலந்து கொண்டனர்.