ம.இ.கா தேர்தல்: உதவி தலைவர் பதவியைத் தற்காக்கப் போட்டியிடுவேன்! -டத்தோ டி.மோகன்

147

கோலாலம்பூர், ஏப்.20-

டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தின் கீழ் மஇகா தற்போது ஓரணியாக வலுவுடனும் ,கட்டுக் கோப்புடனும் செயல்படுகிறது. இந்நிலை நீடிக்க கட்சித் தேர்தலில் தனது உதவி தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளத் தான் போட்டியிடவிருப்பதாக டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.

“ம.இ,கா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரும் ஒன்றிணைந்து கட்சியை திறம்பட வழிநடத்தி வருகின்றனர்.இந்த இருவருடன் நல்ல சகோதரத்துவ உணர்வோடு நான் பழகி வருகிறேன். இதில் எந்தப் பங்கமும் வந்துவிடக் கூடாது.ஆகையால், வரும் கட்சித் தேர்தலில் எனது நடப்பு உதவித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதற்காக களம் இறங்கவிருக்கிறேன்” என்றார்.

“மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அது அவர்களின் விருப்பம். என்னைப் பொறுத்தவரை மஇகாவின் தற்போதைய சீரிய தலைமைத்துவத்திற்கு ஆதரவளித்து அதன் அனைத்து போராட்டங்களுக்கும் துணை நின்று கட்சியின் இலக்கை அடைவதற்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் ” என்று இங்கு தலைநகர் சீன அசெம்ளி மண்டபத்தில் மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் 23ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

“பதவிக்காக எங்களுக்குள் இருக்கும் அணுக்கமான உறவை நான் பாழ்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.அதோடு, டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரும் கட்சியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர். உதவித் தலைவராக இருந்து கட்சிக்கு எனது ஆக்கப்பூர்வ பங்களிப்பை தொடர்ந்து வழங்க விரும்புகிறேன்” என்றார்.

விரைவில் நடைபெறவிருக்கும் மஇகா தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குத் தான் போட்டியிடப் போவதாகப் பேசப்படுவது தொடர்பில் டி.மோகன் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.