கோலகுபு பாரு இடைத்தேர்தல்: வாக்களிக்கும் உரிமையை தவற விடாதீர்! -டத்தோ லோக பாலா வலியுறுத்து

51

கோலாலம்பூர், ஏப்.22-

வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்கும் தங்களின் கடமையை நிறைவேற்றும்படி அத்தொகுதி வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். வாக்களிக்கும் உரிமை பெற்ற ஒவ்வொருவரும் இதனை அவசியம் நிறைவேற்ற வேண்டும் என்று மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலா கேட்டுக் கொண்டார்.

இந்த இடைத்தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்று கோலகுபு பாரு மக்களை ஒருசில தரப்பினர் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் தேர்தலில் வாக்களிப்பது என்பது தங்களின் உரிமை என்பதை இவர்கள் உணர வேண்டும். ஆகவே, இந்த வாய்ப்பை இவர்கள் தவற விடக் கூடாது என்றார் அவர்.

தங்களுக்கு சேவையாற்றக்கூடிய தகுதியான சட்டமன்ற உறுப்பினர் யார் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கு இத்தொகுதி மக்களுக்கு உரிமை உள்ளது. ஆகவே, இந்த தேர்தலில் வாக்களிப்பதன் வழி தங்களின் ஜனநாயகக் கடமையை இவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று இங்குள்ள மைபிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயலவை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.