கோலாலம்பூர், மே 4-
அண்மையில் நடைபெற்ற கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் 95ஆவது ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் அதன் தலைவர் நிவாஸ் ராகவன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அதே வேளையில், இச்சங்கத்தின் தலைவராக மீண்டும் தன்னைத் தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது உளமார்ந்த நன்றியை அவர் புலப்படுத்தினார்.
இந்த ஆண்டுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டது இச்சங்கத்தின் வளர்ச்சி மற்றும் வணிகர்களின் மேம்பாடு மீது உறுப்பினர்கள் கொண்ட கடப்பாட்டையே பறைசாற்றுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இச்சங்கம் தொடர்ந்து வளர்ச்சியும் வெற்றியும் காண்பதற்கு உறுப்பினர்கள் கொண்டிருக்கும் கடப்பாடு மற்றும் இதன் நடவடிக்கைகளுக்கு அவர்கள் வழங்கி வரும் வற்றாத ஆதரவே காரணம் என்பதை நிவாஸ் சுட்டிக் காட்டினார்.
“வலுவான இச்சங்கத்தைத் தொடர்ந்து வழிநடத்துவதற்கு என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கிய உறுப்பினர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் விவரித்தார்.
“அடுத்து வரும் ஈராண்டுகளில் உங்களின் வற்றாத ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு சங்கம் எதிர்நோக்கும் சவால்களை எளிதாகக் கடப்பதற்கும் சங்கம் இதற்கு முன்னர் இருந்ததைத் காட்டிலும் மேலும் வலுவுடன் திகழ்வதற்கும் உதவும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
“கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சம்மேளனத்தின் அடுத்தக் கட்ட வெற்றிக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்”.
“உறுப்பினர்களாகிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியை இதன் வழி தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.





