வெ.8.64 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: 6 இந்தியர்கள் உட்பட 17 பேர் கைது!

50

செமினி, ஜூன் 11-

காஜாங் மற்றும் செராஸ் சுற்று வட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் பாதுகாவலர் நிறுவனத்தின் பின்னணியில் பல்வேறு வகையான போதைப்பொருளை விநியோகித்து வந்த கும்பலின் நடவடிக்கையை போலீஸ் முறியடித்ததாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ காவ் கோக் சின் தெரிவித்தார்.

போதைப்பொருள் தயாரிப்புக் கூடமாகவும் சேமிப்புக் கிடங்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு வீட்டில் கடந்த 5ஆம் தேதியன்று பிற்பகல் 1.10 தொடங்கி இரவு 9.30 மணி வரை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வெ.8.64 மில்லியன் மதிப்பிலான பல்வேறு வகையான போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர்.

இதில் 18 முதல் 50 வயதிற்குட்பட்ட இக்கும்பலின் தலைவன் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 6 இந்திய ஆடவர்கள், 3 சீன ஆடவர்கள், 6 பாகிஸ்தானிய ஆடவர்கள் உட்பட வெளிநாட்டு பிரஜைகள் எழுவர், ஒரு வியட்னாமிய பெண் ஆகியோர் அடங்குவர்.

இச்சோதனை நடவடிக்கையில் அடுக்ககத்திலிருந்த ஒரு வீடு உட்பட போதைப்பொருள் தயாரிப்பு கூடமாக இருந்து வந்த ஒரு வீடும் சோதனையிடப்பட்டன.

இவர்களிடமிருந்து மெத்தா எண்ணெய் (526 கிலோ கிராம்), கெத்தமின் (409 கிராம்), ஹெரோயின் (504 கிராம்), எராமின் 5 மாத்திரைகள் (10,000), எம்.டி.எம்.ஏ தூள் (1.11 கிலோ) உட்பட பல்வேறு வகையான போதைப்பொருள், தயாரிப்பு கருவிகள், திரவங்கள், ரசாயன தூள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த அடுக்ககம் மற்றும் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு வாரத்திற்கு முன்புதான் இவர்கள் வாடகைக்கு எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அமலாக்கத் தரப்பினரை ஏமாற்றுவதற்கு இவர்கள் அங்கும் இங்கும் இடம் மாறிக் கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
அதே சமயம், கிள்ளான் பள்ளத்தாக்குச் சுற்றுப் பகுதி உட்பட உள்நாட்டுச் சந்தைகளில் போதைப்பொருளை விநியோகிப்பதில் இவர்கள் குரியர் சேவையைப் பயன்படுத்தி உள்ளனர்

இக்கும்பலைச் சேர்ந்த 6 பேர் மீது குற்றப் பதிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 4 பேர் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தனர்.

அதோடு, இதில் போதைப்பொருள் உட்பட பி.எம்.டபள்யூ, ஹோண்டா எச்.ஆர்.வீ., ஹோண்டா சி.ஆர்.வீ., ஹோண்டா சிவிக், பெரோடூவா மைவி, தொயோத்தா ஹைலக்ஸ், இ.எக்ஸ்5 மோட்டார் சைக்கிள், பல்வேறு நாடுகளின் ரொக்கம், நகைகள் ஆகியவை 1988 அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் (சொத்துகள் பறிமுதல்) கீழ் கைப்பற்றப்பட்டன.

இதில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் வெ.8.64 மில்லியன் மதிப்புள்ளவையாகும். இவர்கள் அனைவரும் விசாரணைக்காக 1952 அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் நாளை வரை தடுப்பில் வைக்கப்படுவர் என்று செமினி போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய போது டத்தோ காவ் கோக் சின் குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் கூட்டத்தில் சிலாங்கூர் மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ சசிகலா தேவியும் கலந்து கொண்டார்.